Wednesday, March 30, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 8

இது போன்ற முட்டாள்தனமான ஆலோசனை ஒன்றை ஏன் அவர்கள் முன் வைத்தார்கள் என்று எனது நண்பர் ஒருவரைக் கேட்டேன்.  அந்த கோரிக்கை மனுவை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாததாக அது செய்துவிட்டது. அரசு சில நேரங்களில் பயனற்றவர்களை நியமிக்கிறது என்பதால், அதைத் தவிர்க்கத்தான் இக்கோரிக்கை வைக்கப்பட்டது என்று அவர் கூறினார். கவுன்சிலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? போலியான ஒருவரைப் பார்த்து தலையசைத்துக் கொண்டிருப்பீர்களா? உங்கள் கடமை களை நீங்கள் செய்தால், எந்த அரசாங் கத்திற்கும் போலியாக பெயரளவுக்கு எவரையும் நியமிக்கும் துணிவு வராது. கவுன்சிலில் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாவர். இத்தகைய போலி உறுப்பினர்களை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டால் போதும். அவர்கள் ஓடியே போய் விடுவார்கள். அலுவலர்கள் அல்லாத கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தால், அவர்களை எதிர்கொள்ள எந்த போலி உறுப்பினராலும் முடியாது. இதில் உண்மை என்னவென்றால், அலுவலர் அல்லாத உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே நிருவாகக் குழு உறுப்பினர் களாக  தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்புகின்றனர் என்பதுதான்.  நல்லது பெரியோர்களே, இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாமல் மறுக்கப்படுமேயா னால், அந்த கோரிக்கை மனுவை எழுதியவர் உண்மையான, நடைமுறை சாத்தியமான அரசியலைப் பற்றி எதுவும் அறியாதவராகவே இருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க திறமை மிகுந்த அரசியல்வாதி எவரும் தேவை யில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெரும்பான்மையும் வரவு செலவுத்  திட்டமும்
அடுத்து வரும் குறையுடன் ஒப்பிடும் போது இந்த சிறு குறைகள் ஒன்றுமே இல்லை என்று கூறலாம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க அளவு பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பொருளாதாரச் சுதந்திரம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டதையடுத்து, பணம் அளிக்கும் மசோதாக்களாக வரவு செலவு திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனை யுடன் சேர்த்து இதனைப் படித்துப் பார்க்க வேண்டும். இரண்டு நிபந்தனைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னை சட்டமன்றத்தில் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இந்த கவுன்சிலின் மூலமாகத்தான் வரவுசெலவு திட்டம், பண மசோதாக்கள்  வடிவில் நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு கவுன்சிலில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒரு தீர்மானத்திற்கு  ஒரே ஒரு முறைதான் வாக்களிப்படும்; சில நேரங்களில் அதுவும் குரல் வாக்கெடுப்பாகவும் இருக்கும். ஆனால் ஒரு வரவுசெலவு சட்ட மசோதா ஒரு தடை ஓட்டத்தைக் கடக்க வேண்டி யிருக்கும். அனைத்து பொருளாதார திட்டங்களும், பண மசோதாக்கள் வடிவில்தான் நிறைவேற்றப்படவேண்டும். உண்மையான, நடைமுறை சாத்தியமான அரசியலைப் பற்றி அறிந்தவர்கள் எவரும், ஒரு மசோதாவுக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாவிட்டால், அந்த மசோதா நிறை வேற்றப்பட இயலாது என்பதை அறிந் திருப்பார்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் பொருளாதார நிலை பற்றி ஒரு கடுமை யான நிலையை மேற்கொண்டாலோ அல்லது அவர்களில் சிலர் அரசுக்கு எதிராக செயல்படுவது என்று தீர்மானமாக இருந்தாலோ, வரவு செலவு திட்ட மசோதா எவ்வாறு நிறைவேறும்? எந்த ஒரு நிலையிலும் மசோதா தோல்வியடையக் கூடும்.  எந்த மசோதாவும் எந்த நிலையிலும் கைவிடப்படலாம்.  வரவு செலவு திட்ட மசோதா அரசாங்கத்தால் நிறைவேற்றப் படாவிட்டால், உங்களால் ஒரு பைசா கூட வரி வசூல் செய்ய முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்தத் திட்டம் என்னவாகும்? மற்ற இடங்களில் என்ன நடக்கும் என்று என்னால் கூறமுடியும். இங்கிலாந்தின் மக்கள் அவையில் நிதி அமைச்சர் வரவுசெலவு திட்ட மசோதாவைத் தாக்கல் செய்கிறார். அதில் ஏதேனும் ஒன்று மறுக்கப்பட்டால், அரசு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்கிறது; மற்றொரு குழு வந்து புதிய அரசை உருவாக்குகிறது. வரவுசெலவு திட்ட மசோதா தோல்வி அடைந்தால், அரசு பதவி விலகவேண்டும் என்பது நிபந்தனை. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இதர நாடுகளில் இப்படித்தான் நடைபெறுகிறது. ஸ்விட்சர்லாந்தில் கவுன்சிலின் பணியாள ராக இருக்கும் நிருவாகக் குழு நாடாளு மன்றம் விரும்புவதைச் செய்கிறது. பென்ட்லேன்ட் பிரபு ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைக்கிறார்; அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், நிரு வாகத்தை அவரால் தொடர்ந்து நடத்த முடியாது. அவர் ராஜினாமா செய்யவேண் டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர் ராஜினாமா செய்தால், அரசை அமைப்பதற்கு வேறு ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.  பென்ட்லேன்ட் பிரபு பதவி விலகிச் செல்லவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அரசின் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நீங்கள் கேட்கவில்லை; அந்த அளவுக்கு நீங்கள் முன்னேற்றம் பெற்றிருக்கவில்லை. வேறு ஒரு முறையில் உங்கள் திட்டங்களை முன்வைத்திருந்தால் அதனை நீங்கள் கேட்டிருக்க முடியும். வைஸ்ராயோ, கவனர்னரோ அமைச்சரவையில் சேராமல் தனியாக உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டு வரலாம் என்று நீங்கள் கேட்டிருக்கலாம். இங்குள்ள முன்னணித் தலைவர்களைக் கொண்டு நிருவாக அரசாங்கம் உருவாக்கப் படுகிறது. அமைச்சரவையை அமைக்க ஒருவர் கவர்னரால் கேட்டுக் கொள் ளப்படுகிறார். இது போன்ற அமைச் சரவை தோற்கடிக்கப்பட்டால், கவர்னர் வேறு ஒருவரை அமைச்சரவை அமைக்க அழைக்கலாம். இதுதான் காலனி நாட்டு சுய ஆட்சி. இந்த மனுவை எழுதிய கனவான்கள் ஹோம் ரூலைக் கேட்டுள்ளனர். வைஸ்ராயைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு சிறு மாற்றத்தைச் செய்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற நிபந்தனைகளை அவர்கள் மாற்றவில்லை. அதனால் நாம் ஒரு கலப்பின அமைப்பைப் பெற்றிருக் கிறோம்; ஆனால் அது எப்போதுமே வேலை செய்யப் போவதில்லை. இந்த பத்தொன்பது உறுப்பினர்களோ அல் லது அவர்களை வியந்து பாராட்டு பவர்களோ அரசின் இந்தக் கஷ் டத்தைக் கடப்பதற்கான ஒரு நடை முறையை முன்வைக்க முடியுமா என்றும், வரவு செலவு திட்டத்தை கவுன்சிலின் மூலம் நிறைவேற்றும் அதிகாரத்தைப் பெற்று நிருவாகத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல முடியுமா என்றும் கேட்க நான் விரும்புகிறேன்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 10

மக்களின் அறியாமை
காங்கிரசின் கடந்த தலைவராக இருந்த அம்பிகா சரண் மஜும்தார் எனது பழைய நண்பர் ஆவார். நாம் சுய ஆட்சியைப் பெறுவதற்கு முன்பு நமது மக்கள் அனைவரும் போதுமான அளவிற்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தேவையில்லாதது என்று ஒரு பேச்சில் அவர் குறிப்பிட்டார். அரசின் தலைமைப் பொறுப்பில் கற்றறிந்த ஒரு பிரிவு மக்கள் இருப்பார்கள்.  அரசை நடத்திச் செல்லும் அவர்கள்  பொது மக்கள் மற்றும் அயல் நாட்டினரின் நலன்களை பார்த்துக் கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.  சுயஆட்சி பற்றிய அனைத்துக் கோரிக்கைகளும் அதன் அடிப்படையில் அமைந்தவை என்பதால்,  அந்த அறிவிப்பு பரிசீல னைக்கு உகந்தது. வாக்கு உரிமையைப் புரிந்து கொள்வதற்கு போதுமான கல்வியறிவை நம் நாட்டு மக்களில் பெரும்பாலோர் பெற்றிருக்கவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தனிக் குழுவின் கொடுங்கோல் ஆட்சிக்கு அதிகார மாற்றம்
அதனால்,  பாமர மக்கள் அனை வரது நலன்களையும் அவர்களைவிட மேலான ஒரு பிரிவு மக்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதுதான் சுய ஆட்சி என்பதன் உண்மையான பொருளாகும். அதில் பல ஆபத்துகள் உள்ளன. இத்தகைய நிலை எங்கெல்லாம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் சுய ஆட்சியை வரவேற்கத் தயாராக இருந்த உயர் பிரிவு மக்கள், காலப்போக்கில் அவர்களுக்குக் கீழே இருந்தவர்களை நசுக்கிவிட்டு, தங்கள் கைகளிலேயே அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வியப்பளிக்கும் வகையில் பிடிவாதமாக அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருந் தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. தங்கள் நாட்டின் அரசாங்கத்தில் தங்கள் பங்கை ஏற்றுக்கொள்ள மக்கள் தாங்களாகவே தயாரானபோது, புரவலர்களாக அதிகாரத்தில் இருந்த மக்கள்  அதிகாரத்தை விட்டுச் செல்ல சம்மதிக்கவேயில்லை.  அவ்வாறு இல்லாமல், பிரபுக்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அதிகாரம் அமைதி யான முறையில் மாற்றம் பெற்றது இங்கிலாந்து நாட்டில் மட்டும்தான்.   ரத்தம் சிந்தாமல், அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்ந்தது என்றுதான் நான் குறிப்பிடுகிறேன்.  அவர்களும் அரசியல் களத்தில் சண்டையிட்டுள்ளனர்; ஆனாலும் இரத்தம் சிந்தாமல் சண்டையிட்டுக் கொண்டனர்.  அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்ந்த ஒரே நாடு இங்கிலாந்து மட்டும்தான்.  பிரான்சில் புரட்சி நடந்தது. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மனிதான்.  ஜெர்மனியில் இன்றும் உண்மையான மக்களாட்சி உரு வாகவில்லை. ஜெர்மனியில் அதிகாரம் கொடுங்கோல் ஆட்சி புரியும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே உள்ளது. பேரரசரையும் அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர்; அதே போல் மற்ற அனைத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் தான் பேரழிவை ஏற்படுத்தும் உலகப் போரைக் கொண்டு வந்தவர்கள்.  போர் முடிந்த பிறகு, ஜெர்மனியில் மக் களாட்சி மலர்வதற்கு நேசநாடுகளின் உதவியை ஜெர்மனியர் கேட்டுப் பெற வேண்டிய நிலை உருவாகும். நம்பிக்கைக்குரிய ஒரு பிரிவினரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு, பின்னர் ஒரு நாளில் மக்கள் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்த தாங்களே தகுதி பெற்ற நிலையில், அதிகாரத்தை எடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. இவ்வாறு தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்காமல் இயங்க உங்களால் முடிந்தால், அவ்வாறே இயங்குங்கள்.  அய்ரோப்பிய நாடுகளில் அது தவிர்க்க முடியாதது. ஏதோ ஒரு வகையில் அங்கு செயல்பட்டுதான் ஆக வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. பிறரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தவிர்க்க முடியாதது அல்ல.  சுய ஆட்சியின் செயல்பாடுகளைச் செய்ய இயன்ற நிலையில் பொதுமக்கள் கல்வி கற்பிக்கப்பட்டு, முன்னேற்றம் பெறச் செய்யப்படும் வரை அவர்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள நம்மிடம் மிக நல்ல மனிதர்கள் உள்ளனர்.இந்த காப் பாளர்களிடம் இருந்து மற்ற காப்பாளர் களுக்கு அதிகாரம் மாற்றம் செய்யப்பட வேண்டியதன் தேவை,  மற்றும் மறுபடியும் அவர்களிடமிருந்து மக்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை என்ன? ஆங்கிலேய அரசு தாங்கள் மக்களின் வியக்கத்தகுந்த  பாதுகாவலர்கள் என்பதையும் அவர்களின் நலன்களைப் பேணும்  பிரதிநிதிகள்  என்பதையும் ஆங்கிலேய அரசு மெய்ப்பித்துள்ளது என்பதை எந்த இந்தியரும் மறுக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன். இந்நாட்டில் உள்ள படித்த மக்கள் இந்நாட்டு படிக்காத மக்களின் நல்ல பாதுகாவலர்களாக இருப் பார்கள் என்று நீங்கள் கூறுவீர்களே யானால், என்னதான் நடந்தது என்பது பற்றி ஒரு சில நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துக்காட்ட நான் விரும்புகிறேன். ஒரு முகமதிய சங்கத்தின் உறுப்பினர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். உங்களுடைய பெயர் மற்றும் நலன்கள் பற்றி பொதுத் தேர்வு ஆணையம் என்ன செய்தது என்று உங்களுக்குச் சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். ஒரே நேரத்தில் தேர்வு என்று நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்ததற்கு ஆதரவாக பொதுத் தேர்வு ஆணையத்தின் முன் இந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான கற்றறிந்த மக்கள் அளித்த சாட்சியம் அமைந்திருந்தது. இங்கிலாந்திலும், அதே நேரத்தில் இந்தியாவிலும் நடத்தப்படும் இந்திய சிவில் சர்வீஸ் பணிக்கான  தேர்வு அது. இத்தேர்வினை இந்தியாவிலோ, இங்கிலாந்திலோ எழுதலாம். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரே பட்டியலில் தொகுக்கப்படுவார்கள். ஆனால் பெரும் அளவினான மக்கள் அதில் தவறு கண்டார்கள். இத்தகைய நடைமுறை யிலான தேர்வில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களே அரசுப் பணியில் சேர அனுமதிக் கப்படுகின்றனர் என்பதால் அதை அவர்கள் விரும்பவில்லை. அரசுப் பணியில் சேர்வது இந்த ஒரு அம்சத்திற்கு முக்கிய மானது.
அது அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பது ஆகும்; அரசியல் அதிகாரம் பரவலாக வினியோகிக்கப்படாவிட்டால், அதில் எப்போதுமே ஆபத்து உள்ளது. கலப்பின மக்கள் வாழும் நாடுகளில் ஏற்பட்ட அனுபவம் இத்தகையதே. அதி காரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் நீங்கள் குவித்தால், மற்றொரு சமூகம் கொடுங்கோலாட்சிக்கு உட்படுத் தப்படும் ஆபத்தும், அதிகாரம் நிறைந்த சமூகத்தின் கொடுங்கோலாட்சி மற்றும் அடக்குமுறையை  எதிர்த்து  மற்ற சமூகத்தினர் போராடும் ஆபத்தும்  இருக்கிறது. ஆனால் இது பற்றி இரு வேறு கருத்துகள் இருந்தன. பொதுத் தேர்வு ஆணையம் இங்கே வந்தபோது, உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளும் ஒரு முகமதிய பிரதிநிதி அதில் இருந்தார்.  இந்தியா முழுவதும் அந்த ஆணையம் சென்றுவிட்டு தனது அறிக்கையை அனுப்பிய பின்னர், முகமதிய பிரதிநிதி ஒருவர் மட்டுமே ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் தேர்வுக்கு ஆதரவாக இருந்தார். மற்ற பிரதிநிதிகள் அனைவரும் அதற்கு எதிராக இருந் தார்கள்.
ஆவலைத் தோற்றுவிக்கும் அளவில், தான் சாட்சியம் அளித் துள்ளதாகக் கூறிய சென்னை பத்திரி கையைச் சேர்ந்த அவரது ஆதரவாளர் ஒருவரை நான் கண்டேன். அத்தகைய முக்கியமான ஒருவர் சாட்சியம் அளித் துள்ளார். பொதுப் பணித் தேர்வு ஆணையத்தின் அந்த பெரிய அறிக்கை யில் சாட்சியம் அளித்திருந்த 28 முகமதியர்களில் 7 பேர் ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும், 15 பேர் எதிராகவும் சாட்சியம் அளித்தனர். மேலும் 4 பேர் ஒரே நேர தேர்வுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த போதும்,  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களின் சமூகத்தைப் பொறுத்து தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியது உண்மையில் ஒரே நேர தேர்வுக்கு எதிரானதாகும். ஒரு கனவான் கூறினார் எனது சொந்த கருத்து ஒரே நேரத் தேர்வுக்கு ஆதர வானது. ஆனால் எனது சமூகத்தின் பிரதிநிதியாக நான் இங்கே இருக் கிறேன்; எனது சமூகம் அதற்கு எதிராக இருக்கிறது. வெளிப்படையான நாணய மான அறிவிப்பு அது. மாகாணப் பணியைச் சேர்ந்த  ஒரு கனவான்  இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க வில்லை.  மாகாணங்களைப் பொறுத்த வரை உள்ள இடையூறுகளை பெரும் பான்மையான பொதுப்பணித் தேர்வு ஆணைய உறுப்பினர்கள் சுட்டிக்காட் டினர். சில மாகாணங்களில் சிலவற் றிற்கு எதிரான உணர்வுகள் மற்ற மாநிலங்களில் உள்ள உணர்வுகளை விட பலமாக உள்ளன. எனவே, முக மதிய கருத்து எவ்வாறு பிளவுபட்டுள்ளது என்பதைக் கவனிப்பது ஆர்வம் அளிப் பதாக உள்ளது.  தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

Tuesday, March 15, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 7

நடைமுறை சாத்தியமான சீர்திருத்தம்

அரசியல் சீர்திருத்தத்தைக் கேட்கும்போது, ஒன்றிரண்டு விஷயங்களை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று- வெறும் உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்த, நடைமுறைப் படுத்தப்படும் சாத்தியக் கூறுகள் அற்ற ஒரு சீர்திருத்தம் எந்த நன்மையையும் அளிக்காது. நடைமுறை சாத்தியம் உள்ள, எவர் ஒருவராலும் நடைமுறைப் படுத்தப்பட இயன்ற ஒன்றைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். வெறும் உணர்வுகளின் அடிப்படையில் இது இது எங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் கேட்டால், அதற்கு எந்த அரசியல்வாதியும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்; உங்களின் கோரிக்கை இங்கிலாந்து நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பகுத்தாய்வு செய்யப்படும் போது சுயஆட்சிக்குத் தகுதியானவர்கள் என்று கூறிக் கொண்ட மனிதர்கள் இவர்கள்தானா என்று அங்கிருக்கும் அரசியல்வாதிகள் கேட்கக்கூடும். ஆனால், இத்தகைய கோரிக்கைகளைக் கேட்பவர்கள், நடைமுறை சாத்தியமான செயல்களைச் செய்யும் மனிதர்களல்ல. எப்போதும் நீங்கள் பயப்பட வேண்டிய ஆபத்து அதுதான். உங்கள் கோரிக்கைகளை முன் வைக்கும்போது, அவை நடை முறை சாத்தியமானவையா என்பதை சோதித்துப் பாருங்கள்.

பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு

ஹோம் ரூலைப் பற்றி பேச்சை விட்டுவிட்டு, நமது அடுத்த தவணை அரசியல் சீர்திருத்தத்திற்காக நான் கேள்விப்பட்ட நடைமுறை சாத்திய முள்ள திட்டத்தைப்பற்றிப் பேச விரும்பு கிறேன். ஆங்கிலப் பேரரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்தொன்பது பேர் வைஸ்ராய் அவர்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கை மனு பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கக்கூடும். இந்த ஆவணத்தைப் பற்றிய வேறுபட்ட கருத்தை வெளியிட்ட மைக்காக நான் திட்டப்பட்டேன், தாக்கப்பட்டேன், கண்டணம் தெரிவிக் கப்பட்டேன். இந்த ஆவணத்தின் கருத் தில் இருந்து நான் மாறுபட்டிருந்தேன். நடைமுறை சாத்தியமற்ற, செயல்பட இயலாத திட்டம் அது என்பது எனது கருத்து. ஒரு சில நிமிடங்கள் எனக்கு அளித்தால், அம்மனுவின் திட்டங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் என்னால் மறுத்துப் பேச முடியும்.

நிருவாகக் குழு

முதல் செயல்திட்டமே நிருவாகக் குழுவைப் பற்றியது. வைஸ்ராயின் நிருவாகக் குழு மற்றும் மாகாண ஆளுநர் களின் நிருவாகக் குழுக்களில் அதிக எண்ணிக்கை கொண்ட இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அது நியாய மான கோரிக்கை என்பது உண்மையே. நிருவாகக் குழு உறுப்பினர்களில் பாதிப் பேராவது இந்தியர்களாக இருக்க வேண் டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். மாகாண கவர்னர்களின் நிருவாகக் கவுன்சிலின் உறுப்பினர்களின் எண் ணிக்கை ஆறாக உயர்த்தப்பட்டு, அவர் களில் மூன்று இந்தியர்களும், மூன்று அய்ரோப்பியர்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்கள் கருத்து என நம்பு கிறேன்.

அது ஒரு நல்ல திட்டம்தான்; எவர் ஒருவராலும் அதில் ஒரு குறையும் காண முடியாது. அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொண்டிருந்தால், அந்த ஆலோசனை நல்லதொரு ஆலோசனையாகக் கருதப் பட்டிருக்கும். மக்களின் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கும் நிருவாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். இப்போது அந்த ஆலோசனை நடைமுறை சாத்தியமற்ற ஒன்று என்று உண்மையான அரசியல் வாதிக்குத் தோன்றக்கூடும். கவுன்சி லுடன் கூடிய கவர்னர்தான் இந் நாட்டின் அரசாங்கமாகக் கருதப்படுகிறது. சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால், பென்ட்லான்ட் பிரபு சென்னை அரசாங்கத்தின் தலைவராவார். அவருக்கு உதவி செய்ய மூன்று ஆலோ சகர்கள் உள்ளனர். இந்த ஆலோசகர் களின் பணி மற்றும் சென்னை அரசாங் கத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப் பானவர் கவர்னர் பென்ட்லான்ட் பிரபு தான். எனவே அது பென்ட்லான்ட் பிரபு வின் அரசாங்கம். இது போன்ற நடை முறை கொண்ட உலக நாடுகள் அனைத் திலும், அரசாங்கத்தின் தலைவர் தனது ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் வழக்கமானது.

ஒரே ஒரு நாடு தவிர மற்ற அனைத்து நாகரிக நாடுகளிலும் இதுதான் வழக்கம். இதற்குக் காரணம், அவ்வாறு தேர்ந்தெடுக்க அவரை அனுமதிக்கவில்லை என்றால், அவர்களின் செயல்பாடுகளுக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்பதுதான். எனது ஆலோசகர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்; அவர்களுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அவர்களின் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று கவர்னர் கூறக்கூடும். அதற்கு உங்களால் என்ன பதில் கூறமுடியும்? கூறுவதற்கு எந்த பதிலும் இல்லை. வேறு நபர்களால் தன் மீது திணிக்கப்பட்ட ஆலோசகர்களைக் கொண்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்க சுயமரியாதை உள்ள எந்த மனிதரும் ஒப்புக்கொள்ள மாட்டார். தனது ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லாவிட்டால், எந்த மரியாதைக்குரிய மனிதரும் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார். இது முற்றிலும் நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையாகும். இந்த விதிக்கு விலக்கான ஒரு நாடு உள்ளது என்று நான் முன்பு குறிப்பிட் டுள்ளேன்.

ஸ்விட்சர்லாந்துதான் அந்த நாடு. ஃபெடரல் கவுன்சில் உறுப்பினர்களால் பெடரல் கவுன்சிலின் தலைமை நிருவாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஸ்விட்சர்லாந்து நாடு தனித்தன்மை வாய்ந்த ஒரு நாடாகும். அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தை நீங்கள் படித்துப் பார்த்தீர்களேயானால், மக்கள் தங்களைத் தாங்களே நேரடியாக ஆண்டு கொள்வது என்ற தனித் தன்மை வாய்ந்த கருத்தினைக் கண்டு நீங்கள் திகைப்படைந்து இருப்பீர்கள். ஸ்விட் சர்லாந்து ஃபெடரல் அரசாங்கத்தின் நிருவாகத் தலைமை என்பது ஸ்விஸ் ஃபெடரல் கவுன்சிலாகும். இரு சட்ட மன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் அவற்றின் உறுப்பினர்களால், 3 ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்டது இந்தக் கவுன்சில். இரு அவைகளிலும் உறுப் பினராக ஆகத் தகுதி பெற்ற எவர் ஒருவரையும் கவுன்சில் உறுப்பினராக ஃபெடரல் சட்டமன்றம் தேர்ந்தெடுக்க லாம். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கான பணியை செய்யாமல் இருக்க வேண்டும். சட்டமன்றக் கூட்டங்களிலும், விவாதங் களிலும் அவர் கலந்து கொள்ளலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை அவருக்கு இல்லை.

ஸ்விஸ் நிருவாகக் கவுன்சில் உறுப்பினர்கள் என்பவர்கள் சட்டமன்றத்தின் பணியாளர்களே அன்றி, தலைவர்கள் அல்ல. சென்னை மாநகராட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தின்படி கூறப்பட்டுள்ள நகராட்சி ஆணையரின் பணியைப் போன்றது இந்த ஸ்விஸ் நிருவாகக் குழுவின் பணியாகும். ஆணையரின் நிலையே மேலானது என்று கூறலாம். ஏனென் றால் அவருக்கென்று சில அதிகா ரங்கள் உள்ளன. மக்கள் கூறுவதற்கு அடிபணிவதைத் தவிர, ஸ்விஸ் நிரு வாகக் குழு உறுப்பினர்களுக்கு வேறு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. நாடாளுமன்ற நடைமுறை செயல்படும் வேறு எந்த ஒரு நாட்டிலும், இத்தகைய தேர்தல் என்னும் நடைமுறை, நடை முறை சாத்தியம் அற்றதாகவும், செயல் பட இயலாததாகவும் இருக்கும். அந்த நடைமுறையில் ஒரு மாற்றத்தை ஏன் இங்கே கேட்கிறார்கள் என்பது உண்மை யில் எனக்குப் புரியவே இல்லை.

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

http://viduthalai.in/new/page-2/5449.html 

Sunday, March 13, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 6

 அன்னிபெசன்ட் அம்மையாரின் பல்டி
மேலும், சுயஆட்சிக்கான முதல் முயற்சி ஓர் ஆங்கி லேயப் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் வியப்பளிப்ப தாக இருக்கிறது. அவர் இங்கிலாந்து நாட்டுக்காரரா அல்லது அயர்லாந்து நாட்டுக்காரரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது இளமைக் காலத்தில் இங்கிலாந்து நாட்டு அரசியலில் போது மான அனுபவத்தை அவர் பெற்றிருந்தார் என்பதும், அரசியல் விவகாரங்களை முழுமையாக அறிந்திருந் தார் என்பதும் உண்மை. எனவே, ஏதோ ஓர் அறியாமையின் காரணமாக இந்தியாவுக்கு சுயஆட்சி தேவை என்ற ஒரு திட்டத்தை அவர் முன்வைத்திருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். சுயஆட்சி தேவை என்ற இந்தியாவின் கோரிக்கை பற்றிய அவரது கருத்துகளைப் பதிவு செய்த ஆவணம் ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம்.  அதில் இருந்து இரண்டு பகுதி களை மட்டும் உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்பு கிறேன்.   1905 இல் அவர் ஆற்றிய சொற்பொழிவில், ஒரு நாடு மற்றும் அதன் எல்லை என்பவற்றைத் தீர்மானிப்பதில் புவியியல் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரே மண்ணில் இரண்டு நாடுகள் இருக்க முடியாது. ஒரு நாட்டுக்கு தேச எல்லை என்று ஒன்று இருக்க வேண்டும். இந்தியாவில் ஒரே சமயத்தில், ஓர் இந்து நாட்டையும், ஒரு முஸ்லிம் நாட்டையும் நம்மால் பெற்றிருக்க முடியாது. இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், வங்காளம் முதல் கத்தியவார் வரையிலுமான ஒரே ஒரு இந்திய நாட்டை நாம் பெறவேண்டும். ஒரு புவியியல் எல்லை விவரிக் கப்பட்டதற்காக சுயஆட்சி வழங்குவது பற்றி சுய நினைவு உள்ள எவரும் கருதமாட்டார்கள். (கை தட்டல்). 1911 இல் அந்தப் பெண்மணி கூறுகிறார்: ஆங்கிலேய ஆட்சி நியாயமான ஆட்சி.  நாட்டை ஆள்வதற்கு சுயஆட்சி கோரும்  முன்பாக, இந்திய மக்கள் முதலில் நிற்கவும், நடக்கவும் கற்றுக் கொள் ளட்டும்.  இது உண்மையான பேச்சு. பெரியோர்களே, நமது நாட்டிற்கு சுயஆட்சி அளிக்கும் விஷயத்தின் மீது இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1911 ஆம் ஆண்டின் இறுதியில், சுயஆட்சி வழங்குவதற்குத் தேவையான சூழ்நிலைகள், நிபந்தனைகள் எவை என்பது பற்றிய சரியான கருத்துகளை அந்த அம்மை யார் கொண்டிருந்தார்.  இறுதியாக நான் குறிப்பிட்ட அவரது கருத்துகளை அவர் வெளிப்படுத்தி சரியாக நான்கு ஆண்டுகள் கழிந்த பின் 1915 இல், ஹோம் ரூல் இயக்கத்தின் தலைவராக அந்தப் பெண்மணி வெளியே வருகிறார்.
சுயஆட்சியின் தோற்றம்
இந்த சுயஆட்சி இயக்கம் உருவாகி வளர்ந்த சூழ் நிலைகள் பற்றி, பல சிரமங்களுக்கிடையில் நான்  நெருக்கமாக அறிந்து கொண்டேன்.  நாட்டின் முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள்அனைவரும் பெரும் எண்ணிக்கையில் தொடர்புடைய இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்படும் கட்சி நம் நாட்டில் உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தப் பெண்மணி எவ்வாறு காங்கிரஸ் கட்சியிடமிருந்து அரசியல் செல்வாக்கைக் கைப்பற்றி, தனது சொந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு,  காங்கிரஸ்காரர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று, அவர்களைப் பின்பற்றுவதற்கு பதிலாக அவர்களை வழிநடத்திச் செல்ல இயன்றவர் ஆனார்? இது எவ்வாறு நேர்ந்தது?  ஹோம் ரூல் என்னும் கருத்து சென்னையில் உருவாகிய கதை நியூ இந்தியா இதழின் பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய கட்டுரைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கும் சிரமத்தை எவரேனும் எடுத்துக் கொண்டால், அது அவர்களின் முயற்சிக்கு தக்க பலன் அளிக்கும்.  காங்கிரஸ் கட்சியில் சமரசம் ஏற்படுத்துவ தற்கான முயற்சியில் முதன்முதலாக சுயஆட்சி  இயக்கம் தோற்றம் பெற்றது. 1907-ஆம் ஆண்டில் சூரத் தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதி களிடையே, தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று  இரண்டு பிரிவுகளாக பிளவு ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  தீவிரவாதிகளுக்கும், மிதவாதி களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த 1914 இல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. ஒற்றுமையை ஏற்படுத்தும் திட்டம் நிராகரிக்கப் பட்டவுடன் நியூ இந்தியாவில் வெளிவந்த அச்சுறுத்தல் ஏற்படுத்திய கட்டுரை ஒன்றில், காங்கிரஸ் கட்சி இன்னமும் செயல் திறன் அற்றதாக இருக்குமே யானால், அதில் உள்ள இளைஞர்கள் செயல்பட வேண்டிய தருணம் இது. இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைமை அமைப் பாக விளங்குவதாக காங்கிரஸ் கருதப்படுவதால், அதற்கு எதிராக அவர்கள் செயல்படவேண்டிய தில்லை. ஆனால் காங்கிரஸ் தற்போது  மேற்கொள்ள விரும்பாத களங்களில் பணியாற்றும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக் கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேறு சொற் களில் சொல்வதானால், காங்கிரஸ் கட்சி சுயஆட்சி முயற்சியை மேற் கொள்ளவில்லை என்றால், நான் மேற்கொள்வேன் என்பதேயாகும். உண்மையில் அதன் பொருள் இதுதான். அதன்பின் நியூ இந்தியாவில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. ஆசியாவின் மறு மலர்ச்சிக்கு,  சீனாவின் ஆக்கிரமிப்பு எண்ணங்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை போன்று இந்தியாவுக்கு சுயஆட்சி அளிக்கப்பட வேண்டும் என்று அது கோரியது. சீனா ஒரு பெரிய தேசமானால், அது இந்தியாவைத் தாக்கக்கூடும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு சுயஆட்சி அளிக்கப்பட்டு, அது தன் கால்களில் நிற்கச் செய்யப்பட வேண்டும். அந்த வாதம்தான் முன் வைக்கப்பட்டது. பின்னர் 1915 ஆகஸ்ட் 3  அன்றைய நியூ இந்தியாவில்,  சுயஆட்சிக்கு மக்கள் போராடவேண்டும் என்றும், சுதந்திரத்துக்காக போரிட வேண்டும் என்றும்  தெரிவித்து, யார் எங்களுடன் சேர்வீர்கள்? என்று கேள்வி கேட்டு,  ஒரு தெளிவான எச்சரிக்கை வெளி வந்தது. ஆகஸ்ட் 17 அன்று வெளிவந்த கட்டுரையில், ஆங்கிலப் பேரரசு மறுகட்டமைப்புச் செய்யப்படுவதில் இந்தியாவின் சுதந்திரத்துக்கான வாய்ப்பு உள்ளது என்று அந்த அம்மையார் விவாதித்துள்ளார்.
உலகப் போர்ப் பிரகடனம்தான் இந்த சுயஆட்சிக் கருத்து தோற்றம் பெற்றதற்கான காரணம். ஜெர்மனி மீது இங்கிலாந்து போர் பிரகடனம் செய்து பல மாதங்கள் கழிந்தபின்தான் இந்த சுய ஆட்சி கருத்து முழுவதும் தோற்றம் பெற்றது. போரைத் தொடர்ந்து ஆங்கிலப் பேரரசின் மறுகட்டமைப்பில் இந்தியாவின் சுதந்திரத்துக்கான வாய்ப்புள்ளது என்ற தெளிவான அறிவிப்பு இது. ஆனால் யார் அதைச் சொல்லி இருந்தாலும் சரி, ஆங்கிலப் பேரரசு மறுகட்டமைப்பு செய்யப்படுவது உறுதியானது. அவ்வாறு சொன்னது யாராக இருந்தாலும், இந்திய சூழ்நிலைகள் மாற்றி அமைக்கப்படுவதும் உறுதியானது. எந்த ஒரு பொறுப்புள்ள மனிதனும் இவ்வாறு சொல்லியிருக்க முடியும் என்று நான் கருதவில்லை. பின்னர் செப்டம்பர் 7 அன்று நியூ இந்தியா இந்திய அரசியல் சூழ்நிலை பற்றி கலந்தாலோசிக்க, சர் பெரோஷ் ஷா மேத்தாவை சந்திக்க அன்னி பெசன்ட் பம்பாய் சென்றார் என்று அறிவித்தது. வேறு சொற்களில் சொல்வதானால், சுயஆட்சி பிரச்சாரம் பற்றி சர் பெரோஷ் ஷா மேதாவிடம் பேசுவதற்காகச் சென்றார் என்பதுதான். அவ்வாறுதான் நான் ஊகிக்கிறேன். செப்டம்பர் 13 அன்று பம்பாய் அசோசியேடட் பிரஸ் பிரதிநிதி ஒருவர் அன்னி பெசன்டுடன் இந்திய சுய ஆட்சி பற்றி பேசினார். இந்த விஷயத்தில் நாடு போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும், இதனை காங்கிரஸ் கட்சி தலைமையேற்று நடத்தவேண்டும் என்றும், காங்கிரஸ் இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், தானே அப்போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் அன்னி பெசன்ட் கூறினார். இந்தியாவுக்கு ஹோம்ரூல்  என்று அவர் அழைத்த சுயஆட்சிக்கான திட்டம் ஒன்றை காங்கிரஸ் வடிவமைத்த பிறகு, சுயஆட்சியைப் பற்றி அதிக அளவில் அறிந்திருப் பவர்களும், அதிக அளவில் எதிர்ப்பவர்களும் ஆன ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார்.பின்னர் செப்டம்பர் 15 அன்று காங்கிரஸ் மற்றும் சுயஆட்சி பற்றி எழுதிய அன்னி பெசன்ட் எஸ்.பி.சின்ஹா சுயராஜ்யம் கோரவேண்டும் என்று விரும்பினார். சர் பெரோஷ் ஷா மேதாவுடனான அன்னி பெசன்டின் சந்திப்பு மனநிறைவளிப்பதாக இல்லை என்பதால், அவர் பம்பாயில் நீண்ட காலமாக அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறார் என்றும், அவரைத் தவிர வேறு எவராவது இதனைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அளவுக்குத் துணிவு பெற்றவர்கள் இருக்கின்றனரா என்பது அய்யப்பாடாக உள்ளது என்றும். அன்னி பெசன்ட் தாக்கிப் பேசினார். நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதர் தீவிரமாக செயல்படமுடியாது; தனது ஆதரவாளர்கள் பின்பற்ற ஒரு தீவிரமான கொள்கையை வடிவமைக்க விரும்புபவராகவும் இருக்க முடியாது. சுயஆட்சிக்கான வழியைப் பின்பற்று வதற்கான அறிகுறி ஏதும் பம்பாயில் தோன்றவில்லை. பின்னர் செப்டம்பர் 25 அன்று சென்னையில் ஹோம் ரூல் இயக்கம் பிறந்தது. இதன் தலைவர் தாதாபாய் நவ்ரோஜி என்று கூறப்பட்ட போதும், அவர் இதனை மறுத்துள்ளார். அப்போது முதல் ஹோம் ரூல் இயக்கம் செயல்பட்டு வந்தது. ஹோம் ரூல் இயக்கத்திற்காக காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றும் முயற்சி 1915 இல் மேற்கொள்ளப்பட்டது.
எஸ்.பி. சின்ஹா அவர்களின் உறுதியையும், அறிவு நுட்பத் தையும் பாராட்டத்தான் வேண்டும். அவரை விட்டால், ஒரே மாதிரியான சிந்தனையுடைய அரசியல்வாதி வேறு எவரையும் இந்தியாவில் காண முடியாது. காங்கிரசைக் கைப்பற்றும் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. அடுத்த காங்கிரஸ் மாநாட்டிற்காக அது தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த காங்கிரஸ் மாநாட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் அதிகாரபூர்வமான செய்தி ஏதும் இல்லை என்பதால் அதனைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. அன்னிபெசன்ட் அம்மையார் வடிவமைத்த ஹோம் ரூல் இயக்கத்திற்குத் தாங்கள் ஆதரவாக இருக்கிறார்களா அல்லது எதிராக இருக்கிறார்களா என்பதை எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும் கூற முடியுமோ, அந்த அளவுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் கூறவேண்டிய வர்கள்  காங்கிரஸ்காரர்கள்தான்.  எனது நண்பர்கள் ஒரு சிலரிடமிருந்து அது பற்றி அறிந்து கொள்ள முயன்ற போதும், என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஹோம் ரூல் என்பதும் சுயஆட்சி என்பதும் ஒன்றுதான் என்றும், ஒரு சிறு வேறுபாடு மட்டுமே அவற்றிடையே உள்ளது என்றும்  அவர்கள் கூறினார்கள். அவர்களிட மிருந்து உறுதியாக எதனையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே தாங்கள் ஹோம் ரூல் இயக்கத்தவர்களா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். ஹோம் ரூலுக்கு இன்னமும் நாம் தயாராகவில்லை என்பதால், அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள் நாம் என்று மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதுமானது என்று கருதுகிறேன்.
சுயஆட்சிக்கான பக்குவத்தை இந்தியா இன்னமும் பெறவில்லை
சுயஆட்சி நமக்குக் கிடைக்கும் நேரம் வரவே வராது என்று ஒரு போதும்  நான் கூறமாட்டேன். அதற்கான நேரம் கட்டாயம் வரும்.  அன்னி பெசன்ட் அம்மையாரோ, அஹமது தம்பி மரைக்காயரோ அல்லது நானோ அதனைக் காண வாழ்ந்திருக்க மாட்டோம். எங்கள் காலத்திற்கு வெகுநாட்கள் கழிந்த பின்னரே அந்த நேரம் வரும். அதனைப் பெறும் முன் நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகள் பலப்பல உள்ளன. அவற்றை நிறைவு செய்யும் முன் நாம் அதனைப் பெற்றால், அது நாட்டையே பாழ்படுத்திவிடும். போருக்கு முன் அயர்லாந்து ஹோம் ரூலைப் பெற இருந்தது. ஹோம் ரூல் மசோதாக்கள் மக்கள் மன்றங்களில்  நிறைவேற்றப்படுவதற்காக விவாதிக்கப்பட்டு வந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டம் இரு முறை பிரபுக்கள் அவையால் நிராகரிக்கப்பட்டது. மூன் றாவது முறையும் பிரபுக்கள் அவை அதனை நிராகரித் தால், அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட லாம்.  என்ன நடந்தது? உள்நாட்டுப் போர்  தொடங்கக் கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்தது. அயர்லாந்தில் இருந்த ராணுவத்தினர் பலரும் தங்களின் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்து விட்டனர். அதனால் ராணுவம் பயனற்றதாக ஆகிவிட்டது. அயர்லாந்தில் உள் நாட்டுப் போர் மூளும் நிலை உருவானது. இந்தப்போர் தொடங்கியவுடன், ஹோம் ரூல் சட்டத்தினை சட்டப் புத்தகத்தில் வைப்பது என்றும், அதைப் பற்றி மற்றொரு முறை விவாதிக்கும் வாய்ப்பு ஏற்படும் வரை அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் ஒரு இணக்கமாக ஏற்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதனால், இன்று சாத்தியமே இல்லாததும், இன்று தேவையில்லாததும், இன்று தவிர்க்க முடியாததாக இல்லாததும் ஆன ஹோம் ரூலினை நீங்கள் இப்போது பெற்றாலும், அதனுடன் இறுதி ஒப்பந்தம் எதனையும் கொண்டு வர அதனால் இயலாது. பல பிரிவுகளைக் கொண்டிருக்கும், நம் நாட்டைப் போன்ற பிளவுபட்ட நாடு ஒன்றில்,   இந்தியா முழுவதிலும் செல்வாக்கு பெற்றுள்ள, நிலைபெற்ற, தற்போதுள்ள இங்கிலாந்து நாட்டு அரசின் கீழ் உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அதை விடக் குறைந்த அளவுதான் சுயஆட்சியின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும்.
ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் மறுகட்டமைப்பு
பெரியோர்களே, மேலும் தொடர்வதற்கு முன் ஒரு சிறிய விஷயத்தைப் பற்றி பேச நான் விரும்புகிறேன்.  ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் மறுகட்டமைப்பு இருக்கும் என்றும், அந்த மறுகட்டமைப்பில் இந்தியாவும் சேர்க்கப்படும் என்றும் அவர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். தற்போதுள்ள ஏற்பாடு தவறாகிப் போனால், அதனால் ஏற்படும் மாற்றங்களில், அடித் தளத்தில் வைத்துக் காண்பதற்குப் பதிலாக தன்னை மேல்தட்டில் வைத்துக் காணும் சமத்துவத்திலான நம்பிக்கையை எவரும் பெற்றிருப்பது இயல்புதான். அதனால் மிகப் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் மாறுதல் ஏற்படவேண்டும் என்று விரும்புகின்றனர். உருவாக்கி நிலைநிறுத்தப்பட்ட  ஒரு நிலையில் இருந்து ஏற்பட இயன்ற எந்த மாற்றமும் படிப்படியானதாகவும், மெல்ல மெல்ல ஏற்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நீங்கள் கவனமாக எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால், இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் இருந்த நிலையைவிட ஒரு மோசமான நிலையில் மாற்றம் ஏற்பட்ட பின் நீங்கள் இருப்பதைக் காண நேரிடலாம். இங்கிலாந்து நாட்டில் மறுகட்டமைப்பு முதலில் ஏற்படவேண்டும். இங்கி லாந்து அரசின் பல காலனி நாடுகளிலும் இந்த மறு கட்டமைப்பு ஏற்படக்கூடும்.  அதற்கான மிகவும் பொருத்தமான காரணங்கள் உள்ளன.
உலகப் போருக்குப் பின்,  தற்போது இங்கிலாந்து உள்ள நிலையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? பெரும் பாலான தொழிற்சாலைகள் ஒன்று மூடப்பட்டுவிட்டன அல்லது போர்த் தளவாடங்கள் செய்ய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.  அதனால், அவர்களின் தொழில் துறை முடங்கிய நிலையில் உள்ளது. அந் நாட்டில் இருந்த ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டனர். போரின் தொடக்க நிலையில் இங்கிலாந்து நாடு 730,000 துருப்புகள் கொண்ட ராணுவத்தைப் பெற்றிருந்தது. தற்போது, அவர்களின் ராணுவத்தில் 50 லட்சம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்கள். தங்கள் தங்களின் தொழில்களைக் கைவிட்டுவிட்டு ராணுவத் தில் சேர்ந்து பணியாற்றும்படி பணிக்கப்பட்டவர்கள் அவர்கள். சாதாரணமான, வழக்கமான தொழில் களிலிருந்து 50 லட்சம் மக்கள் ராணுவத்திற்கு எடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு மூன்று ஆண்டு களுக்குப் பிறகு, போர்க் களத்தில் இருந்து அவர்கள் திரும்பி வரும்போது, மறுபடியும் அவர்களைத் தங்கள் கால்களில் நிற்கச் செய்ய வேண்டும். அது ஒரு மாபெரும் பணியாகும். இந்தியாவில் இந்த இரண்டு வகையான நிலைகளும் இல்லை. போருக்கு முன் ஆங் கிலேய அரசின் கடன்களுக்கான ஆண்டு செலவு 300,000,000 பவுண்டுகளாக இருந்தது. இந்தப் போரினால் மூழ்கிப் போகக்கூடிய நிதியும், இந்த போருக்காக அவர்கள் திரட்டிய நிதிக்கான கடன் தொகையும் 300,000,000 பவுண்டுகளாக இருக்கும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.  சாதாரண மாக அரசின் ஆண்டு வருவாய் 100,000,000 பவுண்டு களாக இருக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த அவர்கள் கூடுதலாக ஆண்டுதோறும்  300 மில்லியன் பவுண்டுகளைத் திரட்ட வேண்டும். எங்கிருந்து இதனைத் திரட்ட முடியும்? அதன் காரணமாகத்தான் அவர்களின் நிதிச் சுமையைக் காலனி நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.  சுமைகளுக்கு ஈடான சலுகைகளும் தங் களுக்கு அளிக்கப்படாத வரை, அந்தச் சுமையை ஏற்க எவரும் முன்வரமாட்டார்கள்.
அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ளும்படி நாம் கேட்டுக்கொள்ளப்படவில்லை. நம்மால் அச்சுமையை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.  (நாங்கள் நூறு மில்லியன் தருகிறோம் என்று ஒரு குரல் ஒலித்தது.)  காலனி நாடுகளில் பலவும் இன்னும் அதிகமான அளவு நிதி அளித்துள்ளன. 300 மில்லியன் பவுண்டுகள் என்பது  ஓர் ஆண்டுக்கானது மட்டுமே.  அதனால் அக் கண்ணோட்டத்துடன், மறு கட்டமைப்பை அவர்கள் விரும்புவார்கள். அப்போது,   அவர்களின் கல்வி முறை, அமைப்பு முறை மற்றும் இதர துறைகளில் பல குறைகள், தவறுகள் இருப்பது  போரினால் வெளிப்படுத்தப்பட்டதை அவர்கள் காண நேரலாம்.  அவற்றை அவர்கள் சரி செய்ய வேண்டும். அப்படியானால் அது ஒரு மாபெரும் மறுகட்டமைப்பாக இருக்கும்.  ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கூட்டணி நாடுகளின் உதவிகளை அவர்கள் ஒன்று திரட்ட வேண்டும். அவர்களுடன் கூட்டணி அமைத்து, அவர்களுடன் சேர்ந்து போரிட்ட பல நாடுகள் உள்ளன. நெருக்கடியான, தேவையுள்ள காலத்தில் அவர்களுக்கு உதவிய மனிதர்கள் அவர்கள்.  தேவை யான காலத்தில் உதவி செய்பவனே உண்மையான நண்பன்.  அவர்களின் கூட்டணியைத் தொடர வேண்டுமானால்,  வரிகள் மற்றும் இதர விஷயங் களைப் பற்றிய சில ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டும். இவை எவற்றினாலும் இந்தியா பாதிக்கப் படவில்லை. அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கும் மறுகட்டமைப்பு கட்டாயமாக இருக்கும் என்று எவ்வாறு நம்மால் கூறமுடியும்? போருடன் தொடர்புள்ள மறு கட்டமைப்பினால் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதை நம்புவதற்கு நான் மறுக்கிறேன்.  ஆனால்,  நமது அரசியல் சீர்திருத்தத்தின் அடுத்த தவணையை நாம் கோருவதை அதனால் தடுக்க முடியாது; தடுக்காது.  எந்த ஒரு அரசியல் சீர்திருத்தத்தையும் கேட்பதில் இருந்து அது எந்த விதத்திலும் நம்மைத் தடுக்காது.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

Friday, March 11, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை-5

நமது கடந்த காலம்

நல்லது, பெரியோர்களே, இங்கே நாம் சந்தித்துக் கொண்டோம். எனவே நாம் பேசிக்கொள்வோம். எனக்கு அளிக்கப்பட்டுள்ள தலைப்பு நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்பது. அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்களின் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நமது அரசியல் நிலை என்னவாக இருந்தது? கடந்த கால அரசியலை, உங்களில் இளைஞர்களாக உள்ள சிலரால் நெருக்கமாகக் காண இயலாமல் போயிருக்கலாம். நமது கடந்த கால அரசியல் நிலை என்னவாகத்தான் இருந்தது என்பதை உங்களில் பெரும்பாலோர் நினைவு வைத்திருக்கலாம். நமது அரசியல் நிலையில் முன்னேற்றம் தேவை என்று இந்தியர்களாகிய நாம் எப்போதுமே ஆங்கிலேயரைக் கேட்டுக்கொண்டே வந்துள்ளோம். நமது கோரிக்கை களைக் கேட்டு ஆங்கிலேய அரசும் அவ்வப்போது அரசியல் சலுகைகளை நமக்கு அளித்து வந்துள்ளது. நம் நாடு நேரடியாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1857 ஆம் ஆண்டு வந்தது. இந்திய அரசைப் பொறுத்தவரை, 1861 முதல் இந்தியாவை ஆள்வது பற்றி தொடர்ந்து சட்டங்கள் பல இயற்றப் பட்டு வந்துள்ளன. முடிவாக 1909 ஆம் ஆண்டு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேய அரசின் கீழ் நம் நாடு நேரடி ஆட்சிக்கு வந்தவுடன், இந்தி யாவில் இந்தியர்களின் சுயஆட்சி என்ற ஒரு நடைமுறையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். அந்த சுய ஆட்சி யினையும் அவர்கள் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்படுத்தி மேம் படுத்தி வந்துள்ளனர். எனவே நமது கடந்த கால நிலை இதுதான். நாம் அரசியல் சலுகைகளைக் கேட்டு வருகிறோம்; அரசும் அவ்வப்போது நமக்கு அரசியல் சலுகைகளை அளித்து வருகிறது. நாம் கேட்ட சலுகைகள் அனைத்தையும் நமக்கு அரசு வழங்கி யிருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். எந்த ஒரு நாட்டிலும் அவ்வாறு நடக்க முடியாது. அரசு அளிக்க விரும்பும் சலுகைகளை விட சற்று அதிகமான சலுகைகளைத்தான் மக்களும் கேட்டு வருவார்கள். ஆனால் நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் பெற்று வருகிறீர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டு, உங்களின் அரசியல் நிலை எப்போதுமே முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியே அடைந்து வந்திருக்கிறது, எப்போதும் பிற்போக்குத்தனத்தை அடையவில்லை என்பதைக் காணும்போது அது நமக்கு மனநிறைவை அளிப்பதாக இருக்கிறது. சமீப காலம் வரை நமது நிலை பற்றி நாம் அனைவரும் மனநிறைவு கொண்டவர் களாகவே இருந்து வந்துள்ளோம். 1909 இல் நமக்கு அளிக்கப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் எனும் சலுகைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்நாட்டில் வரவேற்கப்பட்டன என் பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்நாட்டில், இந்தச் சீர்திருத்தத்துக் காக மிண்டோ-மார்லி பிரபுக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த மன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சென் னையில் உள்ள எனது அரசியல் சகாக்கள் பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். ஆனால், தாங்கள் விரும்பியவை அனைத்தும் தங்களுக்கு அளிக்கப் படவில்லை என்று அவர்களில் பலர் பேசினர். அவ்வாறு கூறியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இச் சலுகைகள் ஒரு தவணை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டோம். தொடர்ந்து நாம் கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் அடுத்த தவணையில் என்ன கொடுக்கப்படுகிறதோ,அதனைப் பெற்றுக் கொள்வது என்றும் நமது மனங்களை நாம் தயார் செய்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் திடீரென இந்திய அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு நாம் ஆலோசனை செய்யும் முன், இப்புதிய அரசியல் இயக்கத்தின் ஆணிவேர் வரை சென்று, இந்த இயக்கம் தோன்று வதற்கான காரணங்கள் எவை, அவற்றை நியாயப்படுத்தும் சூழ்நிலை என்ன, அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன ஆகியவை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தப் பொருள் பற்றி எந்த முடிவும் மேற்கொள்ளும் முன், இவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்து மன நிறை வளிக்கும் பதில் ஒன்றை நீங்கள் காண வேண்டும். அண்மையில் தோன்றிய இந்த இயக்கத்தை (இது வன்முறைசார்ந்த இயக்கம் என்பது எனது கருத்து) ஆங் கிலேய பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை உங்களால் காட்ட முடிந்தால், அதுவே நமது உடன டியான அரசியல் கண்ணோட்டமாகும். அந்த இயக்கத்தை ஆங்கிலேயப் பொது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதை மெய்ப்பிக்க நான் இங்கே வந்துள்ளேன். அப்படியானால் வேறு ஒரு உடனடியான அரசியல் கண் ணோட்டத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அயர்லாந்து நாட்டிற்கான சுய ஆட்சி

பெரியோர்களே, அயர்லாந்தில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து வருவது பற்றிய கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட் டிருந்த ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் நான் மாணவனாக இருந்துள் ளேன் என்பதால், சுயஆட்சி (ஹோம் ரூல்) என்னும் கூப்பாடு பற்றி நானும் நன்கு அறிந்துதான் உள்ளேன். அரசியல் களத்தில் நான் இருந்த அந்த அய்ந்து ஆறு ஆண்டு காலத்தில் ஹோம் ரூலைத் தவிர வேறு எதனைப் பற்றியுமே கேள்விப்படவில்லை. எங்கு பார்த்தாலும் ஹோம் ரூல்தான். எந்த அரசியல் கூட்டமாக இருந்தாலும், வேறு என்ன பொருள்கள் பற்றி பேசப்பட்டாலும், அயர்லாந்துக்கான ஹோம் ரூல் பற்றிய பேச்சு அங்கு கட்டாயம் இருக்கும். எனவே இங்கிலாந்தில் அப்போது இருந்த ஹோம் ரூல் இயக்கம் என்பதைப் பற்றி நான் நன்கு அறிந்தவனாகவே இருந்தேன். ஆனால், இந்தியாவிலும் இதே கூச்சலைக் கேட்ட போது, உண்மையில் அது நம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட கோரிக்கை என்று தொடக் கத்தில் என்னால் கருத இயலவில்லை. ஹோம் ரூல் என்னும் சுயஆட்சி அளிக்கப்படுவதற்கான நிபந்தனைகள், சூழ்நிலைகள் ஆகியவை பற்றி முழுமை யாக எவருமே அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால், அதற்கான குரல் எழுப்ப எவருமே முன் வந்திருக்க மாட்டார்கள். அயர்லாந்தில் இருந்த சூழ்நிலைகளும் கூட சுயஆட்சிக்கு ஏற்ற வையாக இருக்கவில்லை. ஆனால், நீண்ட நாட்களாக இருந்து பின்னர் நீக்கப் பட்ட அயர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் மீண்டும் தங்களுக்கு வேண்டும் என்பது ஒன்றே அயர்லாந்துக்காரர்களின் போராட்டம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயர்லாந் தில் நீண்ட காலமாக நாடாளுமன்றம் இருந்து வந்தது. ஆனால் 1800 ஆம் ஆண்டு இணைப்புச் சட்டத்தின் மூலம் அது நீக்கப்பட்டது. இந்த இணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் முதல், அயர்லாந்துக்காரர்கள் அமைதியாக இல்லாமல், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற அவர்கள் ஏதோ ஒரு வழியில் போராடிக் கொண்டு இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் உண்மையில் அந்தப் போராட்டம் ஹோம் ரூல் இயக்க வடிவத்தைப் பெற்றி ருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அவர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை உருவாக்கினர். கத்தோலிக் கர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களது இதர கோரிக்கைகளுக்கான போராட்டம் உண்மையில் அவர்களிடமிருந்து எடுக்கப் பட்ட நாடாளுமன்றம் தேவை என்ற ஹோம் ரூலுக்கான கோரிக்கையே ஆகும்.

இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள்

இந்தியாவைப் பொறுத்தவரை, ஹோம் ரூல் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரச்சினையாகும். நமக்கு இதற்கு முன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருந்த தில்லை. உண்மையான பொருளில் சுய ஆட்சி என்ற ஒன்றை நாம் பெற்றிருந் தோமா என்பதும் எனக்குத் தெரியாது. பண்டைய இந்து அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு, அப்போதிருந்த அற்புதமான வசதிகளை, சலுகைகளை, வாழ்க்கை முறையை இன்றைய 20 ஆம் நூற்றாண்டின் ஏமாற்றம் அளிக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பேசுவதே ஒரு புதுமையான பாணியாக ஆகிவிட்டது. பண்டைய இந்தியாவில் இருந்த சுயஆட்சி முறையே சிறந்தது என்றும், அதனால் நாம் அதைக் கேட்கிறோம் என்று சில நேரங்களில் நமக்குக் கூறப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை, பண்டைய இந்தியாவில் நாம் கொண்டிருந்த சுய ஆட்சி என்னவென்றால், தனிப்பட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துகள் தான். இந்த பஞ்சாயத்துகளின் கூட் டமைப்பு என்ற எது ஒன்றும் உருவாகவே இல்லை. ஒரு கிராமத்திலிருந்து இன் னொரு கிராமத்துக்கு சரியான தகவல் போக்குவரத்து வசதிகள் அந்நாள்களில் இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாக விளங்கியது. பண்டைய இந்தியாவில் இதைத் தவிர வேறு எந்தவகை சுய ஆட்சி முறையும் நடைமுறையில் இருந்ததாக அதிகார பூர்வ ஆவணங்கள் எவற்றிலும் எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. வாதத்துக்காக, பண்டைய இந்தியாவில் சுய ஆட்சி முறை இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இன்று உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து நீங்கள் வெகு தூரம் விலகி உள்ளீர்கள். சுயஆட்சிக்கான ஆற்றலை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காட்ட உங்களிடம் எதுவுமே இல்லை. அத் தகைய ஆற்றலை உங்கள் முன்னோர் களிடமிருந்து நீங்கள் பெற்றிருந்தால், உங்களது நகராட்சிகள் இன்னும் மேன்மையாக நிருவகிக்கப்பட்டு இருக்க வேண்டும். சிறு நகராட்சிகளைத் திறமை யாக நிருவகிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு நீண்ட காலம் தேவையில்லை. இந்தியாவில், நமக்கு சுய ஆட்சி தேவை என்றால் அதற்கான பயிற்சியும் நமக்கு அவசியம் தேவை. அதற்கான தகுதியை நாம் பெற்று, அதற்குத் தேவையான நமது பண்புகளை வளர்த்துக் கொண்டு, அதன் பின் சுய ஆட்சியைத் தொடங்க வேண்டும். மேலும், ஒற்றுமையாக, எந்த வித வேறுபாடுகளும் அற்ற ஒரே ஒரு நாடாக உள்ள நாடு ஒன்றுக்குதான் சுயஆட்சி என்பதைத் தர இயலும். இந்த பாடத்தை அயர்லாந்து ஹோம் ரூல் இயக்கத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். ஒரு காலத்தில் நாடாளுமன்றம் இருந்த அந்த நாட்டிற்கு, சுயஆட்சி பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்த போதிலும், சுயஆட்சி பெறும் நிலையில் இருந்து அவர்கள் வெகு தொலைவில் உள்ளனர். ஏன்? அயர்லாந்தின் சில பகுதிகளில் குடியேறி வாழும் பிராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் தவிர, மொத்த அயர்லாந்தினரும் கத்தோலிக் கக் கிறித்துவர்கள் என்பதுதான் இதன் காரணம். பெரியோர்களே, அந்த ஒரே ஒரு காரணத்துக்காக அயர்லாந் தினால் சுயஆட்சியைப் பெற இயல வில்லை என்பதை அறிந்து கொள்ளுங் கள். இங்கிலாந்து நாட்டின் மக்கள் அவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்தையும் பார்த்தால், பிராடஸ் டன்டுகள் வாழும் உல்ஸ்டர் பகுதியை ஆட்சி செய்யும் வகையில் கத்தோலிக்கர் வாழும் அயர்லாந்து சுய ஆட்சியைப் பெறும் என்று நான் கருதவில்லை. சுயஆட்சிக்குத் தேவையான மற்றொரு நிபந்தனையான இதுவும் நம் நாட்டிற்கு பொருந்துவதாக இல்லை. ஹோம் ரூலுக்கான மூன்றாவது தேவை என்ன வென்றால், தங்களது வாக்குரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வியிலும் அறிவிலும் மக்கள் முன்னேற்றம் பெற்ற நாடாக அது இருக்கவேண்டும் என்பது. நமது நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் அந்த அளவுக்கு முன்னேற்றம் பெற்றவர்களாக இல்லை. அதனால், சுய ஆட்சி பெறுவதற்குத் தேவையான சூழ்நிலைகள், நிபந்தனைகளை முழு மையாக அறிந்து கொண்ட எவரும், இந்தியாவுக்கு சுயஆட்சி தேவை என்று கூற முன்வரமாட்டார்கள்.

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
http://viduthalai.in/new/page-2/5180.html 

Tuesday, March 8, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் தொடர் கட்டுரை-4

சென்னை விக்டோரியா ஹாலில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிய பேச்சு
நமக்கு உடனடியாக தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம்
(14.3.1917)

முத்தியால்பேட்டை முஸ்லிம் அஞ்சு மான் சார்பில், சென்னை விக்டோரியா ஹாலில் 14.3.1917 அன்று நடைபெற்ற, பெரும் கூட்டமாக மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் டாக்டர் டி.எம். நாயர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான பிரமுகர் கள் கலந்து கொண்டனர். வெளியூரில் இருந்தும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சென்னை வந் திருந்தனர். அஞ்சுமானின் செயலாளர் முஹமது உஸ்மான் அவர்கள் முன் மொழிய, மதிப்பிற்குரிய அஹமது தம்பி மரைக்காயர் அவர்கள் கூட்டத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் பேச்சு

தலைவர் அவர்களே, பெரியோர் களே! கடந்த ஜனவரி 29 அன்று உங்களுக்கெல்லாம் ஏமாற்றமளித்த எனது செயலுக்காக முதற்கண் என் மன்னிப்பைக் கோருகிறேன். அதை அப்படியே விட்டுவிட்டிருப்பேன். ஆனால் உடல் நலமற்று இருந்த நான் உடல் நலம் தேறிய பிறகு சில நாள்கள் கழித்து, ஒரு கனவான் என்னிடம் வந்து ஜனவரி 29 அன்று உண்மையிலேயே எனக்கு உடல் நலமில்லாமல் போனதா என்று கேட்டார். அவர் ஏன் இவ்வாறு கேட்டார் என்று நான் ஒரு புலன் விசாரணையே நடத்த வேண்டிய தாயிற்று.

ஜனவரி 29 அன்று இந்த மேடையில் தோன்றுவதைத் தவிர்க் கவே நான் உடல் நலமில்லை என்று பொய் சொன்னதாக என்மீது குற்றம் சாற்றப்பட்டது என்று அறிய வந்தேன். அவ்வாறு என்மீது ஏன் அவதூறு கூறப் பட்டது என்பதற்குப் பல காரணங்களும் கூறப்பட்டன.

மேலும் பல காரணங்கள் இன்னமும் எனக்கு தெரிய வந்திருக்காது. அதற்கு அடுத்த நாள் இந்த மேடையில் பண்டிட் மதன்மோகன் மாளவியா பேச இருந்தார் என்பது ஒரு காரணமாகக் கூறப்பட்டது. பெரியோர்களே, பண்டிட் மதன்மோகன் மாளவியாவை நான் அறிவேன். பழைய நாள்களில் நான் அவரை அறிந்திருந்தேன். அவரைக் கண்டு நான் வியப்படைந்திருக்கிறேனே தவிர, எப்போதும் அஞ்சியதே இல்லை.

அப்போது அவரைக் கண்டு நான் அஞ்சுவதற்குக் காரணங்கள் ஏதுமில்லை என்னும்போது, இப்போது அஞ்சுவதற்கும் எந்தக் காரணமும் இருக்க முடியாது. வகுப்புவாதம் பேசுவதாகக் கூறப்படும் ஒரு இயக்கத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளமைக்காக ஒரு வேளை அவர் என்னைக் குறை கூறக்கூடும். இத்தகைய இயக்கங்களில் அவரால் குறை காண முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர் அவ்வாறு குற்றம் காண்பாரேயா னால், அது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதே ஆகும். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வகுப்புவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வரும் அவரால் என்னைக் குற்றம் கூற முடியாது. எப்படியானாலும் அவரிடம் நான் எந்த வித அச்சமும் கொண்டிருக்கத் தேவையில்லை.

அரசாங்கம் என்னை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்துவிட்டது என்ற வதந்தி தற்போது உலவி வருவதாக எனக்குக் கூறப்பட்டது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொள்வதை அரசாங்கம் ஏன் தடை செய்யவேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் ஜெர்மன் நாட்டு ஏஜெண்ட் அல்ல (சிரிப்பு). எந்த ஜெர்மன்காரரிடமிருந்தும் நான் பணம் ஏதும் பெறவில்லை. அந்நாட்களில் நான் லண்டனில் இருந்தபோது பல ஜெர்மனிய பணியாளர்களுக்கு அன்பளிப்பு அளித் துள்ளேன். அப்போது எனது பணம்தான் ஜெர்மனியர்களின் கைகளுக்குப் போனது.

எனவே, என்னைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்க அரசாங்கத்திற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்குக் கூறப்பட்ட மற்றொரு காரணத்தைப் பற்றிக் கூற நான் விரும்பவில்லை. படுக்கையில் இருந்து எழக்கூடாது என்று இரண்டு மருத்துவர்கள் என்னைத் தடுக்கும் அளவுக்கு எனது உடல் நலமற்றுப் போகாமல் இருந்திருந்தால், ஜனவரி 29 அன்று நான் அக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொண்டு எனது கடமையை செய்திருப்பேன். பெரியோர்களே, இதுவும் இன்னும் பல விஷயங்களும், இங்கே நின்று கொண்டிருக்கும் என்னை ஏதோ தடை ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றவனைப் போன்று நினைக்க வைக்கின்றன.

ஒரு தடகள ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றி ருந்தால் உங்களால் அதை உணரமுடியும். ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பார்வை யாளர்கள் முன் பேசுவது அவ்வளவு கடினமான காரியம் என்று நான் நினைத் திருக்கவில்லை. பழைய நாள்களிலும் அவ்வாறு இருந்தது இல்லை. இந்தக் கூட்டத்தை நடத்துவதில் இன்னின்ன தடைகள் உள்ளன என்று எனது நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். அப்படியானால் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று நான் அவர்களிடம் கூறுவேன்.

ஆனால் இந்தக் கூட்டத்திற்கு வரும் வரைக்கும் எனது நண்பர்கள் என்னை தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே யிருந்தனர். ஆனால், நமது தலைவர் அவர்களும் இன்றிரவு சில தடைகளைச் சந்தித் திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். நாகப்பட்டினம் நகராட்சியின் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொண்டு அவர் வந்துள்ளார் என்று எனக்குக் கூறப் பட்டது. இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க ஒரு விரும்பத்தகாத நேரத்தில் அவர் ஒப்புக் கொண்டுள் ளார்.

அதற்காக நான் மிகவும் வருந்து கிறேன். எனது நண்பர்களுக்குக் கெடு தல்கள் நேர்வதை நான் விரும்புவ தில்லை. எனவே அஹமது தம்பி மரைக் காயர் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழ்வார் என்று நம்புகிறேன். நானும் கூட பிழைத்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் நோயில் இருந்து பிழைத்து எழக்கூடாது என்று நூற்றுக்கணக்கான தேங் காய்கள் கோயில்களில் உடைக்கப்பட்ட தாக எனக்குக் கூறப்பட்டது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

எனது சொந்த ஊரான மலபாரில் தேங்காய் களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை என்று சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த வழியில் சென்னை யில் அவர்களின் தேங்காய்களுக்குச் சரியான சந்தை கிடைக்குமானால், ஏதோ ஒரு சிறிய வழியில் எனது சொந்த மாவட்டத்துக்கு என்னால் பயன் கிடைத்திருக்கிறது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
http://viduthalai.in/new/page-2/4978.html 

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை-3

நினைவு தெரிந்த காலம் முதல், இந்தப் பிரிவினரும், சமூகத்தினரும் அரசிடமிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்று வந்திருக்கவில்லையா? கல்வியைப் பொறுத்தவரையிலும் கூட அனைத்துப் பார்ப்பன ஜாதி மக்களின் பக்கமே வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கவில்லை. கல்வித் துறையில் தாமதமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும், பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் கல்வி கற்று முன்னேறத் தொடங்கினர். பலவிதங்களிலும் முன்னேற்றம் பெற்ற நிலைகளில் இன்று அவர்கள் இருக்கின்றனர். அவர்களில் செட்டி, கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமூகத்தினர் விரைந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். மிகவும் பின்தங்கியிருந்த மக்களும்கூட தங்களைவிடப் பல விதங்களிலும் முன்னேற்றம் அடைந்தவர்களைப் போலவே, புதிய காலத்துக்கு ஏற்ற உயர்நிலையை அடைவதற்குக் கடுமையாக உழைக்கத் தொடங்கி யுள்ளனர். கல்வி கற்று முன்னேற்றம் அடைவது என்ற உணர்வு அந்நியமானது என்றாலும், சில பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் முன்னேற்றம், பார்ப்பனர் களின் முன்னேற்றத்தைவிட நல்லிணக்கம் கொண்ட தாகவும், ஒரே பக்க முன்னேற்றம் அற்றதாகவும் அமைந்திருந்தது. பார்ப்பனப் பெண்கள், குறிப்பாக பார்ப்பன விதவைகளின் கல்வியில், பார்ப்பனர்கள் ஏதோ பின்தங்கிய வகுப்பினரைப் போலக் கருதி, என்ன காரணத்தினாலோ கல்வித் துறை தனி அக்கறை காட்டி வந்தபோதிலும், கல்வி கற்கும் பார்ப்பனப் பெண்களின் சதவிகிதத்தை விட கல்வி கற்கும் நாயர்கள் போன்ற பார்ப்பனர் அல்லாத சமூகப் பெண்களின் சதவிகிதம் அதிகமாகவே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இப்போது பெரு விருப்பம் கொண்டவர்களாகத் தோன்றாவிட்டாலும், வாழ்க்கையின் பல தொழில்களிலும், பல்வேறுபட்ட வழிகளிலும் ராஜதானியின் பொருளாதார மற்றும் ஒழுக்கநெறி முன்னேற்றத்தில் பயன் நிறைந்த வகையில் பெரும் பங்காற்றி வந்தனர். ஆனால் அவர்களும், அவர்களின் சகோதரர்களும் இதுநாள் வரை எந்த வித உதவியுமின்றி இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தனர். அரசியல் அதிகாரம் மற்றும் அலுவலக செல்வாக்கினை பார்ப்பன ஜாதி மக்கள் பல வழிகளிலும் நுணுக்கமாகப் பயன்படுத்தி வந்ததே இதன் காரணம்.


பார்ப்பனர் அல்லாதவர்களுக்கென ஓர் அமைப்பு தேவை

கடுமையான நுண்ணறிவுப் போட்டி நிலவும் இன்றைய நாள்களில், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு தனிப்பட்ட திறமை தேவை என்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால், மக்கள் தொகையில் ஒரு சிறு சதவிகிதம் உள்ள பார்ப்பன ஜாதி மக்கள், ஆங்கிலம் அறிந்த மக்களின் எண்ணிக்கையில், பார்ப்பனர் அல்லாத மக்களைவிட, அதிக சதவிகிதம் உள்ளவர் களாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக, அனைத்து அரசுப் பணிகளையும் - பெரிய பதவியாக இருந்தாலும் சரி, சிறிய பதவியாக இருந்தாலும் சரி, உயர்ந்த பதவியாக இருந்தாலும் சரி, தாழ்ந்த பதவி யாக இருந்தாலும் சரி, - ஒரு சிறிய அளவிலாவது காணப்பட இயன்ற திறமையும், அறிவும், பண்பும் கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களை ஒதுக்கி விட்டு, பார்ப்பனர்களே முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதுதான் நமக்குப் புரியவில்லை. தங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த எண்ணற்ற தடைகளையும் மீறி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த, கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையை எட்டிய, பார்ப்பனர்களிலும் அவர்களுக்கு இணையான வர்களைக் காணமுடியாது என்னும் அளவிலான நிருவாக, நீதித்துறை அதிகாரிகளையும், கல்வியாளர் களையும், வழக்குரைஞர்களையும், மருத்துவர்களை யும், மற்ற முக்கிய அதிகாரிகளையும் பார்ப்பனர் அல்லாத சமூகங்கள் உருவாக்கியுள்ளன. தங்களது சுயமரியாதை உணர்வு மற்றும் அறிவொளி பெற்ற சுய நலன்களைப் பற்றிய அக்கறையினால் வழிநடத்தப் பட்ட அவர்களும் அவர்களது சமூகங்களும் எப்போதும் ஒற்றுமையாகச் செயல்பட்டிருந்தால், அரசு பணிகளுக் கான நியமனங்களிலும், அரசியல் அதிகாரத்திலும் கூட, பார்ப்பனர் அல்லாத மக்கள் அவர்களுக்கு உரிமையான உச்ச நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் இன்று உள்ள நிலையில், தங்களுக்கென்ற திறமை வாய்ந்த தனி அமைப்புகள் எதனையும் அவர்கள் பெற்றிராத காரணத்தினாலும், நவீன ஆயுதமான விளம்பரத்தினைத் தாராளமாகவும், பயன் நிறைந்த வகையிலும் பயன்படுத்தக் கூடிய ஆவலோ, உணர்வோ அற்றவர்களாக அவர்கள் உள்ள காரணத் தினாலும் அவர்களின் நலன்கள், கோரிக்கைகள் முறை யான அளவுக்கு கவனத்தையோ, அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை.

நமக்குத் தேவையானது முறையான அரசியல் முன்னேற்றமே அன்றி, அதிகாரபூர்வமற்ற முறையில் அரசமைப்புச் சட்டம் இயற்றுவது அல்ல இன்றைய அரசியலில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கான வழி இருந்தும் மனநிறைவடையாத இந்த ராஜதானியின் தீவிர அரசியல்வாதிகள், புதிய புதிய அரசியல் சலுகைகளை அவர்கள் கேட்டுப் பெறும் போதெல்லாம் இருந்ததைப் போன்ற மகிழ்ச்சியை இன்று அடையாதவர்களாக இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் இப்போது ஹோம் ரூல் கேட்கின்றனர். இதுபற்றி ஒரு மறுப்புக் கருத்தை உரிய காலத்தில் தெரிவிக்காமல் போனால், இந்தியா முழுவதிலும் ஹோம் ரூலைப் பெறுவதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற கருத்து ஏற்பட்டு விடும் என்று, நமது முந்தைய அனுபவங் களிலிருந்து அறிந்து கொண்ட நாம் அஞ்சுகிறோம். இந்த ஆடம்பரமான திட்டத்தினைப் பற்றிய அல்லது மாமன்னரின் சட்டப் பேரவையின் 19 உறுப்பினர்கள் மேதகு வைஸ்ராய் அவர்களுக்கு அளித்த திட்டம் பற்றிய விவரங்களுக்குள் விரிவாகச் செல்வது நமது நோக்கத் திற்குத் தேவையல்ல. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் குறைக்கும் நோக்கம் கொண்ட எந்த திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் நாம் ஆதரவாக இல்லை. அனைத்து இனம் மற்றும் பிரிவு மக்களிடையே சமநிலை நிலவச் செய்வதற்கும், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும், ஒரு பொது நோக்கமோ தேசபக்தியோ அற்ற மக்கள் குழுக்களாக இந்தியா விளங்காமல் தடுக்கத் தேவையான ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வினை மேம்படுத்தவும் ஆங்கிலேய ஆட்சியாளரால் மட்டுமே முடியும். சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தமான தொழிலான, அதிகாரபூர்வமற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றும் செயலில் இருந்து நம்மை நாமே முற்றிலுமாக விலக்கிக் கொள்கிறோம். தொடர்ந்து அரசியல் முன்னேற்றத்திற்குத் தேவையான, மெய்ப்பிக்கப் படும் தகுதியின் காரணமாக உரிய காலத்தில் வழங்கப் படும் தாராளமான சலுகைகள் மற்றும் விவேகம் பெற்ற பொது மக்களின் நம்பிக்கையைப் பெற இயன்ற, நன்கு விளக்கமளிக்கப்பட்ட ஒரு கொள்கையை பலமாக ஆதரிக்கிறோம் என்று நாம் கூறவேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க நாள்களில், காலம் சென்ற திருவாளர்கள் ஏ.ஓ. ஹ்யூம், டபிள்யூ.சி. பானர்ஜி, பத்ருதீன் தியாப்ஜி, எஸ்.ராமசாமி முதலியார், ரங்கைய நாயுடு, ராவ் பகதூர் சபாபதி முதலியார், சர் சங்கரன் நாயர் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்பட்டு வந்த காலத்தில், சென்னை ராஜதானி முழுவதிலும் இருந்த அறிவொளி பெற்ற பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் தங்களின் உளம் நிறைவான, ஆர்வம் நிறைந்த ஆதரவை அக்கட்சிக்கு அளித்து வந்தனர். அப்போது அந்தக் கட்சி பெயரிலும் வடிவத்திலும் இல்லாவிட்டாலும், உணர்விலும், நடைமுறையிலும் உண்மையான ஒரு தேசிய அமைப்பாக விளங்கியது. அதன் பழைய கொள்கைகளில் சில இன்னும் அப்படியே மாறாமல் இருக்கின்றன. ஆனால் இன்று அதனை வழிநடத்திச் செல்பவர்களின் உணர்வு, கடைப்பிடிக்கும் வழி முறைகள் அனைத்தும் இந்த ராஜதானியின் சிந்தனைமிக்க, சுயமரியாதை உணர்வு கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களின் பாராட்டைப் பெற இயலாதவையாகவே உள்ளன. இந்த மண்ணில் தன் கால்களைப் பதிக்காத சமூக பிற்போக்குவாதிகளும், பொறுமையற்ற அரசியல் கோட்பாட்டளரும் காங்கிரஸ் கட்சியின் முழு கட்டுப் பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனநாயகத்தைத் தனது நோக்கமாக இக்கட்சி கொண்டிருந்தாலும், கட்சியின் செயல்பாடுகளை பொறுப்புணர்வற்ற அதிகார அமைப் பினர் இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கின்றனர். இந்த நாட்டையும் மக்களையும் நன்கு அறிந்துள்ள, நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கும், சுய உணர்வும் தெளிவும் கொண்ட அரசியல் வாதிகள் காங்கிரஸ் இயக்கத்தின்மீது மீண்டும் தங்களின் ஆளுமையை ஏற்படுத்தி, நாட்டில் இன்று நிலவும் உண்மை நிலைக்கு ஏற்றவாறு கட்சியைச் சரியாக நடத்திச் செல்ல விரைவில் வழிகாட்டுவார்கள்.

எந்த ஜாதியின் ஆட்சியும் கூடாது

நம்மைப் பொறுத்தவரையில், நாம் முன்பே கூறியபடி, இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத, தேவை யில்லாத மாற்றங்களை அறிமுகப்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம். ஜாதி அல்லது வர்க்க ஆட்சியை வன்மையாகக் கண்டிக்க நம்மால் இயலாது. இந்தியாவின் சிறந்த உண்மையான நலனுக்காக, ஆங்கிலேயரின் நீதி மற்றும் சமவாய்ப்பு என்னும் கொள்கைகளின் அடிப் படையில் இந்திய அரசு தொடர்ந்து நடத்தப்படவேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பலத்த ஆதரவையும், அக்கறையையும், ஆர்வத்தையும் தெரிவிப்பவர்களாக நாம் இருக்கிறோம். பல குறைபாடுகள் மற்றும் எப்போதாவது நேரும் குழப்பங்களை அது கொண்டிருந்தாலும், ஆங்கிலேய ஆட்சி பொதுவாக நியாயமாகவும், மக்கள்மீது அனுதாபத்துடனும் நடத்தப்படுவதாகும். இந்த நாட்டைப் பற்றி அவர்கள் இன்னும் அதிகமாக அறிய நேரும்போது, பொது மக்களின் விருப்பத்திற்கு - குழப்பமற்ற தெளிவான விருப்பத்திற்கு - பெரிதும் மதிப்பளித்து, அது பற்றி முடிவு எடுப்பதற்கு முன், இதுவரை முன் எப்போதும் இல்லாத முறையில், வழக்கமான முறையில் அல்லாமல், ஒவ்வொரு ஜாதி, பிரிவு, சமூக மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். சமூகப் புறக்கணிப்பு உணர்வும், கடுமையான ஜாதி, பிரிவு வேறுபாடுகளும் மறையத் தொடங்கும்போது ஏற்படும் சுயஆட்சியை நோக்கமாகக் கொண்ட முன்னேற்றம் மனநிறைவளிப்பதாக இருக்கும் என்பதில் அய்யமேதுமில்லை. ஆனால், இன்றைய நிலையில், உண்மை நிலையை உணர்ந்துள்ள அரசியல்வாதி, தன் முன் உடனடியாக உள்ள விஷயங்களைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.

சமஅதிகார விநியோகத்தின் அடிப்படையிலான சுய ஆட்சி

போர் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் முன் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய பிரச்சினை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. தனது அரசமைப்புச் சட்டம் அகண்டதாகவும், ஆழமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தன் மக்கள் - ஒவ்வொரு பிரிவு, ஜாதி, சமூகத்தின் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் - நாட்டில் அவர்களுக்கு உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை மற்றும் அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையின்படி, அதன் நிருவாக விஷயங்களில் மேலும் பயனுள்ள வகையில் ஆலோசனை கூற அனுமதிக்கப்படவேண்டும் என்றும், உள்நாட்டின் கொள்கை மற்றும் பொருளாதார நிலையைப் பாதிக்கும் விஷயங்களில் நிதிச் சுதந்திரமும், சட்டமியற்றும் சுயஅதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்றும், அதன் மக்களின் - ஆங்கிலேயக் குடிமகன்களான அவர்களின் - சுயமரியாதை உணர்வுக்கு ஏற்ற, எந்த சுயஆட்சி காலனி யாலும் ஆக்ரமிக்கப்பட்ட அதிகாரம், கவுரவத்திற்குச் சற்றும் குறையாத அளவில்- ஆங்கிலேயப் பேரரசின்கீழ் ஓரிடம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கான உரிமையை இந்தியா ஈட்டியிருக்கிறது.

பார்ப்பனர் அல்லாதாரின் உடனடியான கடமை

விழிப்புணர்வு பெற்று செயல்பட்டு வரும் பார்ப்பனர் அல்லாத சமூகத்தின் அறிவொளி பெற்ற உறுப்பினர் களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். அவர்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள பணி மிகவும் பெரியதும், அவசரமானதுமாகும். முதலாவதாக, இது வரை செய்ததைவிட அதிக எண்ணிக்கையில் தங்களின் பையன்களையும், பெண்களையும் அவர்கள் கல்வி பயிலச் செய்யவேண்டும். பொறுப்புணர்வு மிக்க பார்ப்பனர் அல்லாத சமூகத் தலைவர்களின் வழிகாட்டுதலில் சங்கங்கள் ஒவ்வொரு மக்கள் தொகை அதிகமாக உள்ள மய்யங்களிலும் தொடங்கப்பட்டு, திறமை மிக்க நிலையில் நிருவகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வி வசதிகளை மேலும் சுதந்திரமாக அனுமதிக்க பல்வேறுபட்ட பார்ப்பனர் அல்லாத சமூகங்களைத் தூண்டுவதுடன், அத்தகைய வசதிகள் இல்லாத இடங்களில் வசதிகளை ஏற்படுத்தவும், ஏழையாக உள்ள அறிவுக்கூர்மையான மாணவர்களை - மற்றவர்களின் உதவியின்றி அவர்களால் படிக்க முடியாது என்ற காரணத்தால் - படிக்க வைக்கத் தேவையான நிதியைத் தேடித் திரட்டவும் வேண்டும். மேலும் நீண்ட காலத் தேவையான, தீவிரமான ஒரு கல்விக் கொள்கை பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்வதற்கான சங்கங்களைத் துவக்குவதுடன், சமூக - பொருளா தார அமைப்புகளையும் தேவைப்படும் இடங்களில் தொடங்கி நன்கு நிருவகிப்பதுடன், தங்களின் கொள் கைகளை, கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான நம் உள்ளூர் மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சொந்த நாளிதழ்களைத் தொடங்கி நடத்தவும் வேண்டும். பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் தங்களின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மையால், தங்களின் குரல் கேட்கப்படச் செய்யத் தவறிவிட்டனர். அவர் களை விட புத்திசாலிகளான மற்றவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக, பார்ப்பன சக குடிமக்க ளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தாங்கள் அடைந் துள்ள இழிந்த நிலையையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி பார்ப்பனர் அல்லாதவர்களிடையே பெரும் அளவிலான மனநிறைவின்மை தோன்றியது. இதைப் பற்றி அரசு முழுமையாக அறிந்திருக்கவில்லை. இந்த மனநிறைவின்மை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அரசின் கவனம் அதன் பக்கம் ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கல்வி, சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தையும் அகண்டதொரு வழியிலும், நீடிக்கும் வகையிலும் அவர்கள் செய்ய வேண்டும். அதன் பின், ஆங்கி லேயக் குடி மக்களான அவர்களின் எதிர்கால வாழ்க்கை இன்றிருப்பதைவிட ஒளிமிகுந்ததாகவும், வளம் மிகுந்ததாகவும் இருக்கும். தேசக் கட்டமைப்பு என்று கூறப்படுவது, உயிர்த் தோற்ற வளர்ச்சியின் மெதுவான நடைமுறையில், ஒவ்வொரு சமூகமும் பிரிவும் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் கடமைகளை முதலாவதாகவும் முதன்மையானதாகவும் செய்வது என்பது ஒரு கடினமான மாபெரும் பணியாகும்; தேவையானதுமாகும். இந்தியாவில், எந்த வழியிலும் எதிர்காலத்தில் வரும் சில நாள்களில், ஒவ்வொரு சமூகமும் தங்களின் சமூக அமைப்பின் நிலையை சரி செய்து கொள்ள வேண்டும்; அப்போதுதான், உயர்ந்த சமூக நோக்கங்களுக்காக மற்ற சமூகங்களுடன் சேர்ந்து செயலாற்றும்போது, வெறும் தலைகளை எண்ணும் மந்தைக் கூட்டமாக இல்லாமல், சுதந்திர மற்ற - உதவுவதற்கு எவரும் அற்ற - இனமாக இல் லாமல், சுயமரியாதை உணர்வுள்ள - மிகவும் முன் னேற்றம் அடைந்த சமூக அமைப்பாக செயல்பட்டு, முற் றிலும் சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக் குவது என்ற பொது நோக்கத்தை எட்டுவதற்காக விருப்பத்துடன் இணைந்து செயலாற்ற முடியும்.

- பி.தியாகராய செட்டி
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

Sunday, February 27, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917-ஆம் ஆண்டு செயல்பாடுகள் - 2

பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரகடனம் - பொது வேலை வாய்ப்புகள்

ராஜதானியின் பொதுப் பணிகளில் பார்ப்பனர் களும், பார்ப்பனர் அல்லாதவர்களும் இருந்த நிலை பற்றி விரிவாக பொதுப் பணி ஆணையத்தின் முன் 1913 ஆம் ஆண்டில், தற்போது சென்னை நிருவாகக் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும் மதிப்பிற்குரிய சர் அலெக் சாண்டர் கார்டியூ சாட்சியம் அளித்தார். அவர் ஒன்றும் பார்ப்பனர் அல்லாத வர்க்கு ஆதர வானவர் அல்ல. இந்திய சிவில் பணிக்கான தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்தினால், ஒரு சிறிய கட்டுப்பாடு மிகுந்த ஜாதியான பார்ப்பனர்கள் இந்தப் பணியை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்பதை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இவ்வாறு சாட்சியம் அளித்தார். 1892-க்கும் 1904-க்கும் இடையே நடத்தப்பட்ட மாகாண சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள் அதாவது 95 விழுக்காடு பார்ப்பனர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. மைசூர் ராஜ்ஜியத்தில், கடந்த 20 ஆண்டு காலத்தில் நடத்தப்பட்ட மைசூர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், காலிப் பணியிடங்களில் 85 விழுக்காடு இடங்களைப் பார்ப்பனர்களே பெற்றுள் ளனர். இதே கால கட்டத்தில், சென்னையில் நடந்த உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில் 17 பார்ப்பனர்களும், 4 பார்ப்பனர் அல்லா தாரும் வெற்றி பெற்றனர். இதனைப் போன்ற முடிவுகளே கணக்குத் துறைக்கு நடந்த போட்டித் தேர்வுகளின் முடிவுகளும் இருந்தன. அக்கால கட்டத்தில் இருந்த 144 உதவி ஆட்சியர்களில் 77 பேர் பார்ப்பனர்கள், 30 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக் கள், எஞ்சியவர்கள் முஸ்லிம்களாகவும், இந்தியக் கிறித்தவர்களாகவும், அய்ரோப்பியர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் இருந்தனர். போட்டித் தேர்வுகள் இல்லாத பணிகளிலும், எடுத்துக்காட்டாக ராஜதானியின் நீதித்துறை சார்புப் பணியில், பெரும்பாலான நியமனங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்தன. 1913 இல் இருந்த 128 நிரந்தர மாவட்ட முன்சீப்புகளில் 93 பேர் பார்ப்பனர்கள், 25 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், எஞ்சியவர்கள் முஸ்லிம்களாகவும், இந்தியக் கிறித்துவர்களாகவும், அய்ரோப்பியர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாக வும் இருந்தனர் என்பதை சர் அலெக்சாண்டர் கார்டியூ தெரிவித்தார். இதிலிருந்தும், இதனைப் போன்ற மற்ற புள்ளிவிவரங்களிலிருந்தும், இந்திய சிவில் சர்வீஸ் பணிக்கான திறந்த போட்டி இந்தியாவில் நடத்தப் படுகிறது என்றால், அது முற்றிலுமாக பார்ப்பனர் களின் ஆதிக்கம் நிறைந்ததாகவே இருக்கும் என்ற முடிவுக்கும், பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் உண்மையில் அதில் இடம் பெறாதவர்களாகவே இருப்பார்கள் என்ற முடிவுக்கும் அவர் வந்தது இயல்பானதே. சென்னை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப் பணிகளில் நிலவிய நிலைக்கு ஆணையத்தின் கவனத்தை அவர் ஈர்க்க வில்லை என்றாலும், இப்போது இருப்பதுபோலவே முன்பும் அரசுப் பணிகளில் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் இருந்தது. புரவலர்களின் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்படும் அரசு சார்நிலைப் பணிகள் பற்றிய புள்ளி விவரங்களை அவர் விரித் துரைக்கவில்லை. இந்தப் பணிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயமானது.

அரசின் பல்வேறுபட்ட துறைப் பணிகளில் தற்போது நிலவும் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு புள்ளிவிவரங்களுக்குள் செல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் அதிக அளவிலான இந்தியர்கள் நியமனம் செய்யப்படும் இந்த ராஜதானியைப் பற்றியும், எந்தக் கொள்கையின் அடிப்படையில் அவை விநியோகிக்கப் படுகின்றன என்பது பற்றியும் ஆணையத்தின் கவனத்தை ஈர்ப்பதை நம்மால் தவிர்க்க இயலவில்லை. மேதகு ஆளுநரின் நிருவாகக் குழுவில் இந்தியர்கள் நியமிக்கப்படத் தொடங்கியது முதல், தொடர்ந்து மூன்று கனவான்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் பார்ப்பன வழக்கறிஞர்கள் ஆவர். உயர்நீதிமன்றத்தில் இருந்த அய்ந்து நீதிபதிகளில் நான்கு இந்து நீதிபதிகளும் பார்ப்பனர்கள் ஆவர். 1914 இல் உருவாக்கப்பட்ட அரசு செயலாளர் பதவியிலும் உடனடியாக பார்ப்பனர்தான் நியமிக்கப்பட்டார். வருவாய்த் துறைக் கழகத்தின் இந்திய செயலாளரும் ஒரு பார்ப்பனர்தான். மாகாண சிவில் சர்வீசின் இந்தியர்களுக்கான இரண்டு மாவட்ட ஆட்சியர் பணியிடங்களும் முகமதியர் அல்லாதவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது எப்போதும் பார்ப்பனர்களுக்கே சென்றுள்ளன. பொது அமைப்புகள்

அரசுப் பணிகளில் என்ன நிலை நிலவியதோ, அதே நிலைதான் உள்ளாட்சி மற்றும் இதர பொது அமைப்புகளி லும் நிலவி வந்தது. வாக்காளர்களில் பெரும்பாலானவர் கள் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், பார்ப்பனர் அல்லாதவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்ப தில்லை. அதன் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை ஆதரிக்காமல் பல வேட் பாளர்களை ஆதரிப்பதும், ஆனால் பார்ப்பனர்கள் ஒற்றுமையாக தங்கள் பார்ப்பன இனத்தைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரிப்பதும்தான். இந்திய கல்வியாளர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை பல்கலைக் கழகத்தில் இவர்கள் பல இந்தியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள் எப்போதுமே பார்ப்பனர் அல்லாத ஒருவரை உள்ளாட்சிக்கான சட்ட மேலவை உறுப்பினராக அனுப்பியதே இல்லை. அதைப் போலவே பார்ப்பனர் அல்லாத எந்த இந்தியரும், அவர் எவ்வளவுதான் உயர்ந்த தகுதி படைத்தவராக இருந்தாலும் சரி, அய்ரோப்பிய கல்வியாளர்களின் ஆதரவு இன்றி, பல்கலைக் கழகத்துக்கான சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பே இருந்ததில்லை. 1924 நவம்பரில் நடைபெற்ற சட்ட மேலவைக் கூட்டம் ஒன்றில், உறுப்பினர் திரு. குன்னிராமன் நாயரின் துணைக் கேள்விக்கு, பல்கலைக் கழகத்தின் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில், 452 பேர் பார்ப்பனர்கள், 12 பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், 74 பேர் இதர சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 1907 முதல் நடத்தப்படும் சட்ட மேலவைக்கான தேர்தல்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்ற 11 பேரும் பார்ப்பனர்களே என்றும் பதிலளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில ஆண்டு கால அனுபவம் பெற்ற கல்வியாளர்களை பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் முறை 1907 -க்கு முன்பு அனுமதிக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. அதே போல் பார்ப்பனர்களே பெரும் பாலானவர்களாக இருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து எப்போதுமே பார்ப்பனர் அல்லாத ஒருவர், அவர் எவ்வளவுதான் திறமை பெற்றவராக இருந்தாலும் சரி, சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை. திறந்த வழி தேர்தல் என்றழைக்கப்படும் சென்னைப் பல் கலைக் கழக செனட் அவையின் தேர்தலிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. மாமன்னரின் சட்ட அவை, உள்ளூர் சட்ட மேலவை மற்றும் நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்தும் கட்டுக்கோப்பும், ஒற்றுமையும் மிகுந்த பார்ப்பனர் இனத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்ததால், இதுவரை விவரிக்கப்பட்டு வந்த உண்மையே இத்தேர்தல்களிலும் நிலவி வந்தது. எப் போதாவது, நியாய உணர்வு கொண்ட ஆட்சியாளர், இந்த சமமற்ற தன்மையைச் சரி செய்யும் நோக்குடன், இதுவரை பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை எந்த பொது அமைப்புக்காவது நியமனம் செய்து விட்டால் போதும், பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சித்தன. அண்மையில், தனது சட்ட மேலவைக்கு சிலரை நியமனம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக மேதகு பென்ட்லாண்ட் பிரபு பார்ப்பனர்களின் பத்திரிகைகளில் எவ்வாறு விமர்சிக்கப் பட்டார் என்பதை பார்ப்பனர்களின் எதிர்ப்பு மனப்பான்மைக் கும், நியாயமற்ற விமர்சனத்துக்கும் எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஏறக்குறைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொறுப்புமிக்க இந்த அவைகளைத் தவிர, சென்னையிலும், மாவட்டங்களிலும் தற்போதுள்ள அரசியல் அமைப்புகளி லும் நடைபெறுகின்ற பொறுப்பாளர்கள் தேர்தல்கள் பற்றிய புள்ளி விவரங்களும் இதே கதையைத்தான் கூறும். அண்மையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட் டிக்கு, சென்னை ராஜதானியிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரில் ஒரு பார்ப்பனரல்லாத இந்துவைத் தவிர மற்ற 14 பேரும் பார்ப்பனர்களே என்ற ஒரு நிகழ்வை இதற்கு எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம். என்றாலும், போருக்குப் பின் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது போன்ற மிகவும் முக்கியமான விஷயங்களில், காங்கிரஸ் கட்சியின் நிருவாகக் குழுவான இந்தக் கமிட்டியின் முடிவே, 4 கோடி பார்ப்பனர் அல்லாத மக்களைக் கொண்ட இந்த பெரிய, முக்கியமான ராஜதானியின் ஒருமித்த கருத்து என்ற தோற்றம் உலக அரங்கின் பார்வைக்குக் காட்டப்படுகிறது. அரசின் சலுகைகளும், அரசால் அளிக்கப்படும் உரிமைகளும் தாராளமாக வழங்கப் படுவது அதிகரிக்க அதிகரிக்க, அவற்றைப் பெற்று அனுபவிக்கும் இந்தக் கட்டுப்பாடும், ஒற்றுமையும் மிகுந்த பார்ப்பன ஜாதி இன்னும் கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பார்ப்பனர் அல்லாதவர்களும், கல்வியும்

இந்த ராஜதானியின் மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் மிகக் குறைந்த அளவினராக இருந் தாலும் கூட, பல்கலைக் கல்வியில் மற்ற அனைத்து சமூகத்தினரையும் விட மிகவும் முன்னேற்றமான ஒரு நிலையை அடைந்து இருக்கின்றனர் என்னும் வாதம், உயர்ந்த அளவிலான அரசுப் பணி நியமனங்களைப் பெற்றிருப்பதற்கும், அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஆதரவாகக் கூறப்படுவதாகும். யாரும் இதனை மறுக்கவில்லை. இந்து ஜாதிகளில் மிக உயர்ந்ததும், மிகவும் புனிதமானதும் என்று கருதப்படுவது இந்த பார்ப்பன ஜாதி. பழைய காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய பழக்க வழக்கங்களின் அடிப்படையிலான அவர்களது பண்டைய பண்பாட்டின் தன்மையும், அந்த நம்பிக்கையும் படிப்படியாக அவர்கள் எழுதிய வேத நூல்களிலும், வாய்மொழிப் போதனைகளிலும் சேர்க்கப்பட்டு மக்களின் மனதில் ஊன்றப்பட்டது. பார்ப்பனர்கள்தான் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட தெய்வீக ஆற்றல் படைத்தவர்கள் என்றும், அவர்களின் துணையின்றி ஆன்மா கடைத்தேற முடியாது என்றும், அவர்களின் துணையுடன்தான் உடலுழைப்பின் கொடுமையிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும் கூறப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி அமைந்த புதிய சூழ்நிலையில், முந்தைய காலங்களில் நடந்து கொண்டது போலவே, ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்வதற்கு, அதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பணிகளையும், சலுகைகளையும் பெற்று பயன் பெறுவதற்கு மற்ற சமூகத்தினரைவிட பார்ப்பனர்களுக்கு இவையெல் லாம் உதவி செய்தன. எவ்வாறாயினும், மண்ணில் நிலவி வந்த பாரம்பரியம் மற்றும் மரபுவழி வந்த நலன்கள், அவற்றுடன் இணைந்த சமூக கவுரவம் ஆகியவற்றைவிட ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டது; ராஜதானியின் பொருளாதார நிலையை நிதானமாக மேம்படுத்தி வந்த அமைதி நிறைந்த தொழில்களைச் செய்யும் கணக்கிலடங்கா எண்ணற்ற மக்களின் பங்களிப்புக்கு எந்தவித மரியாதையும் இல்லாமல் போய்விட்டது.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917 ஆம் ஆண்டு செயல்பாடுகள்-1

கி.வீரமணி ஆசிரியர்
அறிமுக உரை

1967 இல் ஏராளமான தொகுதி களில் -தமிழ்நாட்டில் - வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற் றக் கழகம். அதன் தலைவராக அறிஞர் அண்ணா அவர்கள் தேர்வு பெற்று முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் பார்ப்பன ரல்லாத தனித் (திராவிடர்) தமிழர் அமைச்சரவையை அமைத்து, தந்தை பெரியாருக்கே அது காணிக்கை என்று தமிழக சட்ட மன்றத்தில் பிரகடனப்படுத் தினார் அண்ணா அவர்கள்!

அப்படி ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் செய்தியாளர்கள் ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டார்கள் முதல் அமைச்சர் அண்ணாவை நோக்கி.

தேர்தலுக்கு நிற்க 1957 இல் முடி வெடுத்து 1967 இல் பத்தே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த ஒரே அரசியல் கட்சி - உலக வரலாற்றிலேயே - தி.மு.க. ஒன்றாகத்தான் இருக்கக்கூடும். இதற்கு என்ன முக்கியக் காரணம். விளக்குவீர்களா?

அறிஞர் அண்ணா சொன்னார் - மிகுந்த தன்னடக்கத்துடனும், ஆழ்ந்த வரலாற்றுணர்வோடும்.

இல்லை. நீங்கள் கூறுவது சரியல்ல. 10 ஆண்டு வரலாறு அல்ல. 50 ஆண்டு வரலாற்றை உடைய அது திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி. நீதிக்கட்சி - ஜஸ்டிஸ் கட்சியாக அது தொடங்கப் பட்டது. அது என் பாட்டன்; திராவிடர் கழகம் எனது தாய்க் கழகம்; அதிலிருந்து முகிழ்த்ததே தி.மு.க. என்கிற எனது அரசியல் கட்சி. எனவே, அந்தப் பாரம் பரிய பலத்திலும், அந்தக் கட்டுமானத்தி லிருந்தும் உருவான வெற்றியே எங்கள் வெற்றி என்று கூறினார்!

அந்த திராவிடர் இயக்கமான நீதிக் கட்சி - ஜஸ்டிஸ் என அது நடத்திய ஆங்கில நாளேட்டின் பெயர்தான் ஜஸ்டிஸ் (Justice) என்பது; மக்கள் மத்தியில் அந்தப் பெயரே நிலைத்து விட்டது!

அதன் சரியான முழுப் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation (S.I.L.F.) என்பதேயாகும்.

1916இல் வள்ளல் சர். பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர் பெருமான், சமூக நீதி முன்னோடி சி. நடேச (முதலியார்)னார் ஆகியோரின் முயற்சி யால் தொடங்கப்பட்டு, 1920 இல் (குறைந்த அதிகாரங்களே பிரிட்டிஷ் ஆட்சியினால் தரப்பட்ட நிலையில்) இரட்டை ஆட்சி முறையில் - பதவிக்கு வந்து மிகப் பெரும் சமூகப் புரட்சியை - யுகப் புரட்சி என்று ஒடுக்கப்பட்டவர்கள் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கும் வகையில் பல்வேறு புரட்சிகரமான சட்டங்களை, வேலைத் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. 1920 இல் பதவிக்கு வந்த நிலையில், அதன் கட்சித் தலைவர் வள்ளல் சர். பிட்டி தியாகராயர் - வெள்ளுடை வேந்தர் - தான் முதல் அமைச்சர் (பிரதமர் - ஞசநஅநைச- என்றுதான் அப்போது வழங்குவது வழக்கம்) ஆக மறுத்துவிட்டு, கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராக்கி னார்கள்.

அவரது உடல் நலக் குறைவால், அவரது பதவிக்கு - முதல் அமைச்சராக வந்து, பொறுப்பேற்றுக்கொண்டு பல் வேறு புரட்சிகளை - இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் முதற்கொண்டு பல்வேறு சமூக நீதிச் சட்டங்களைச் செய்து, ஆட்சியைத் திறம்பட நடத்தி வரலாறு படைத்தார்.

1920 -23, (2) 23-26 என்ற காலகட்டத்திலும் சரி, தங்கள் ஆதரவுடன் கூடிய சுயேச்சை அமைச் சரவை டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த போதும் அமைச்சர் முத்தையா முதலியாரால் வகுப்புரிமை ஆணை நிறைவேற்றப்பட்டு, சமூக நீதிக் கொடி யைப் பறக்கவிட்டனர். அன்று ஏற்றப்பட்ட அந்தக் கொடி இன்று இந்தியா முழுவ திலும்கூட தலைநகர் டில்லிப் பட்டணத் தையும் சேர்த்து பறந்து கொண்டுள்ளது!

பொப்பிலி அரசர் முதல்வராக இருந்தபோதும், கட்சித் தலைவராக இருந்தபோதும் அவர், கட்சியை அதன் நெருக்கடியான நேரத்தில் கட்டிக் காத்த நேர்த்தி வரலாற்றுப் பெருமைக்குரியது!

1919இல் ஈரோடு நகராட்சித் தலைவ ராக இருந்த நிலையில் சேலம் நகராட்சித் தலைவராக அதே சம காலத்தில் இருந்த திரு. சி. இராஜகோபாலாச்சாரியாரின் நட்பு இறுகியதன் விளைவாக, டாக்டர் வரதராஜுலு நாயுடு, ஆச்சாரியார் போன்றவர்கள் வற்புறுத்தலாலும் ஈரோடு, கோவை மாவட்ட எல்லைக்குள் தொண் டறம் புரிந்த வணிகத் துறை வள்ளல் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி, காங் கிரஸ் கட்சியில் சேர்ந்து, பார்ப்பனரல் லாதார் இயக்கத் தலைவர்களுக்கு எதிராகப் பேசும் நிலைக்கு ஆளாக்கப் பட்டார்கள். இதை அவர்களே பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

நீதிக் கட்சியினருக்கு எதிராக - பார்ப்பனர்கள் பயன்படும் வண்ணம் பேசி, எழுதி, நடந் தமைக்கு கழுவாய் தேடவே நான் இந்த திராவி டர் சமுதாயத்திற்கு இவ்வளவு தீவிரமாய் உழைத்து வருகிறேன் என்று முழங்கினார் தொண்டு செய்து பழுத்த பழமான நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!

பனகல் அரசர் கொண்டு வந்து நிறைவேற்றிய, கோயில் பெருச்சாளி களின் சுரண்டலைத் தடுக்க உதவிய இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டத்தை காங்கிரசில் இருந்தபோதே - அது நீதிக்கட்சி ஆட்சி செய்தது என்ற போதிலும், அறிவு நாணயத்துடன் மனம் திறந்து பாராட்டி வரவேற்றவர் தந்தை பெரியார் அவர்கள்.

இதனால் - பார்ப்பனத் தலைவர் சத்யமூர்த்தி தந்தை பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்து தன் சுய உருவத்தை - பார்ப்பனீய முகத்தைப் பளிச்சென காட்டிக் கொண்டார்.
அப்படிப்பட்ட நீதிக்கட்சிதான் திராவிடர் எழுச்சி வரலாற்றின் - மறுமலர்ச்சி சகாப்தத்தின் முதல் அடிக் கட்டுமானமாகும்.

அதன் வரலாறு இதுவரை சரியாகவே மக்களிடம் போய்ச் சேரவே இல்லை.

திராவிடர் இயக்க நூல்களையோ, பணிகளையோ, ஆவணப்படுத்தும் நல்ல முறை கடந்த சில ஆண்டுகளாகத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது.

கிடைத்த ஆங்கில நூல்கள் - நீதிக் கட்சி வரலாறு பற்றியதை அப்படியே திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 7, 8, 9 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டிலும், அதற்கு முன்பு நடைபெற்ற ஆற்காடு இரட்டையர் நூற்றாண்டு விழாவின்போதும், ஜஸ்டிஸ் நாளேட்டில் சர்.ஏ. இராமசாமி (முதலியார்) எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு ஆசைசடிச டிக வாந லுநயச என்பதும், இந்த நூலின் ஆங்கில பதிப்பும் வெளியாகின.

இது தமிழாக்கம் செய்து, தோழர் பாலகிருஷ்ணன் அவர்களால், தொடர் கட்டுரையாக வெளியிடப்படுகின்றது. வாசகர்கள் படித்துப் பயன்பெறுக!

கி.வீரமணி (ஆசிரியர்)



தொகுப்பாசிரியர் டி. வரதராஜுலு நாயுடு

முன்னுரை

நீதி(ஜஸ்டிஸ்)க்காகப் போராடும் மாபெரும் ஜனநாயக இயக்கமான நீதிக்கட்சி தொடர்பான, ஒவ்வொரு ஆண்டின் முக்கியமான நிகழ்ச்சி களையும், காலவரிசையில் தொகுத்து, ஒரு தொடராக வெளியிட வேண்டும் என்பது நான் நீண்ட காலமாகப் போற் றிப் பாதுகாத்து வந்த பெருவிருப்ப மாகும்.

1930ஆம் ஆண்டின் முற்பகுதி யில் என்னால் வெளியிடப்பட்ட, 1920 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட ஜஸ்டிஸ் ஆண்டு புத்தகம் நீதிக் கட்சியின் முன்னணி உறுப்பினர் களால் பெரிய அளவில் வரவேற்கப் பட்டது. என்றாலும், இப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, 1930 ஆம் ஆண்டிற்கும் அதனைப் போன்ற ஒரு நூலை வெளியிட, என் கட்டுப்பாட்டுக்கு மீறிய சூழ்நிலைகளினால் இயலாமல் போனது.

என்றாலும், ஜஸ்டிஸ் கட்சி தொடங்கிய 1917 ஆம் ஆண்டு முதல் டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சர் பி. தியாகராயர் செட்டியார் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னேற்றம் பற்றி தொகுத்து வைத்திருக்கும் செய்திகளை, ஆவணங்களை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எனது நலம் விரும்பிகள் கருதினர். அதன் காரணமாக, நீதிக்கட்சி உருவான 1917ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த இயக்கத்தின் நிகழ்வுகளைக் கொண்ட இந்த நூலை வெளிக் கொணர நான் துணிந்துள்ளேன். மான்ட்ஃபோர்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு இந்த ஆண்டு. இது பற்றி நமது கட்சியின் கருத்துகளைத் தெரிவிக்கும் முகத்தான் சில சமகால அரசியல் ஆவணங்களையும் இதில் நான் சேர்த்துள்ளேன்.

இந்த நூல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடைமுறைப் படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்கள் பற்றியும் மற்ற விஷ யங்கள் பற்றியும் நமது கட்சித் தலைவர் களின் கருத்துகளைக் கொண்டது முதல் பகுதி. இந்த ஆண்டு நடத்தப்பட்ட முதல் மாநாடு மற்றும் இதர பார்ப்பனர் அல்லாதாரின் மாநாடுகளின் நடை முறைகளைக் கொண்டது இரண்டாம் பகுதி. 1917 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் கொண்டிருந்த விதிகள், மற்றும் அச்சங்கத்தின் அமைப்பு விதிகள் இந்நூலின் இணைப்புகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரகடனம் (டிசம்பர் 1916)

சென்னையிலும், வெளி ஊர்களிலும் நல்ல நிலையில் இருப்பவர்களும், பொது மக்கள் செல்வாக்கு பெற்றவர்களுமான பார்ப்பனர் அல்லாத பல முக்கியமான பெரியவர்கள் கலந்துகொண்ட, 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட் டில், பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களை மேம்படுத்தும் நடவடிக்கை களை ஆதரிப்பதற்காக ஒரு செய்தித் தாள் வெளியிட ஒரு நிறுவனத்தைத் துவங்க நடவடிக்கை மேற்கொள்வ தென்று தீர்மானிக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவதென் றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாளிதழ்களைத் துவங்க வும், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற பெயரில் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கவும், தென் இந்திய மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்தத் தென்னிந்திய மக்கள் சங்கத் தின் தலைவர் ராவ்பகதூர் பி. தியாகராயர் செட்டியார் கையெழுத்துடன் வெளியிடப் பட்ட பார்ப்பனர் அல்லாதாரின் பிர கடனம் ஒன்று சென்னை ராஜதானி முழுவதிலும் இருந்த பார்ப்பனர் அல்லாத முக்கியப் பிரமுகர்களுக்கு அனுப்பப் பட்டது.

பிரகடனம்

இந்திய ஹோம் ரூல் இயக்கத்தைப் பற்றி, சென்னை ராஜதானியில் உள்ள முக்கியமான பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய முயற்சி மேற்கொள்வதற்கும், அவர்களின் தற்கால அரசியல் நிலையைப் பற்றிய சில உண்மைகளைச் சுட்டிக் காட்டுவதற்குமான நேரம் வந்துவிட்டது.

இந்த ராஜதானியின் மொத்த மக்கள் தொகையான 4.1 கோடியில் 75 விழுக்காடு அளவுக்குக் குறையாமல் பார்ப்பனர் அல்லாத மக்கள் உள்ளனர். பெருவாரியான ஜமீன்தார்கள், நிலச் சுவான்தார்கள், விவசாயிகள் போன்ற வரிசெலுத்தும் மக்களில் பெரும் அளவிலானவர்களும் அவர்களே உள்ளனர்.

ஆனால் சென் னையில் நடைபெறும் அரசியல் என்ன வென்றால், அவர்களுக்கு உரிமையான பங்கை அவர்கள் எடுத்துக் கொள்ள வில்லை என்பதுதான். நாட்டின் பொது அரசியல் முன்னேற்றத்திற்காக, பொது மக்களிடையே தங்களுக்கு உள்ள செல்வாக்கை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது மிகக் குறைந்த அளவே பயன்படுத்திக் கொண்டனர்.

அமைப்பு ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர்களின் பொது நலன்களைப் பாதுகாக்கவும் முன்னேற் றம் பெறச் செய்யவும், நாட்டில் எந்த வித முக்கியத்துவமும் அற்ற அரசியல்வாதி கள் சிலர் தங்கள் சார்பாக பேசுவதாகக் கூறிக் கொள்வதைத் தடுக்கவும் முறையான அமைப்பு எதையும் அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அவர் களின் சார்பாக உண்மைகளைப் பேசு வதற்கான பத்திரிகைகளும் அவர் களிடம் இல்லை. மக்கள் தொகையில் 15 லட்சம் பேர் மட்டுமே உள்ள பார்ப்பனர் களுடன் ஒப்பிட்டுக் காணும்போது, பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

(தொடரும்)