Wednesday, March 30, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 8

இது போன்ற முட்டாள்தனமான ஆலோசனை ஒன்றை ஏன் அவர்கள் முன் வைத்தார்கள் என்று எனது நண்பர் ஒருவரைக் கேட்டேன்.  அந்த கோரிக்கை மனுவை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாததாக அது செய்துவிட்டது. அரசு சில நேரங்களில் பயனற்றவர்களை நியமிக்கிறது என்பதால், அதைத் தவிர்க்கத்தான் இக்கோரிக்கை வைக்கப்பட்டது என்று அவர் கூறினார். கவுன்சிலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? போலியான ஒருவரைப் பார்த்து தலையசைத்துக் கொண்டிருப்பீர்களா? உங்கள் கடமை களை நீங்கள் செய்தால், எந்த அரசாங் கத்திற்கும் போலியாக பெயரளவுக்கு எவரையும் நியமிக்கும் துணிவு வராது. கவுன்சிலில் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாவர். இத்தகைய போலி உறுப்பினர்களை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டால் போதும். அவர்கள் ஓடியே போய் விடுவார்கள். அலுவலர்கள் அல்லாத கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தால், அவர்களை எதிர்கொள்ள எந்த போலி உறுப்பினராலும் முடியாது. இதில் உண்மை என்னவென்றால், அலுவலர் அல்லாத உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே நிருவாகக் குழு உறுப்பினர் களாக  தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்புகின்றனர் என்பதுதான்.  நல்லது பெரியோர்களே, இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாமல் மறுக்கப்படுமேயா னால், அந்த கோரிக்கை மனுவை எழுதியவர் உண்மையான, நடைமுறை சாத்தியமான அரசியலைப் பற்றி எதுவும் அறியாதவராகவே இருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க திறமை மிகுந்த அரசியல்வாதி எவரும் தேவை யில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெரும்பான்மையும் வரவு செலவுத்  திட்டமும்
அடுத்து வரும் குறையுடன் ஒப்பிடும் போது இந்த சிறு குறைகள் ஒன்றுமே இல்லை என்று கூறலாம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க அளவு பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பொருளாதாரச் சுதந்திரம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டதையடுத்து, பணம் அளிக்கும் மசோதாக்களாக வரவு செலவு திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனை யுடன் சேர்த்து இதனைப் படித்துப் பார்க்க வேண்டும். இரண்டு நிபந்தனைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னை சட்டமன்றத்தில் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இந்த கவுன்சிலின் மூலமாகத்தான் வரவுசெலவு திட்டம், பண மசோதாக்கள்  வடிவில் நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு கவுன்சிலில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒரு தீர்மானத்திற்கு  ஒரே ஒரு முறைதான் வாக்களிப்படும்; சில நேரங்களில் அதுவும் குரல் வாக்கெடுப்பாகவும் இருக்கும். ஆனால் ஒரு வரவுசெலவு சட்ட மசோதா ஒரு தடை ஓட்டத்தைக் கடக்க வேண்டி யிருக்கும். அனைத்து பொருளாதார திட்டங்களும், பண மசோதாக்கள் வடிவில்தான் நிறைவேற்றப்படவேண்டும். உண்மையான, நடைமுறை சாத்தியமான அரசியலைப் பற்றி அறிந்தவர்கள் எவரும், ஒரு மசோதாவுக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாவிட்டால், அந்த மசோதா நிறை வேற்றப்பட இயலாது என்பதை அறிந் திருப்பார்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் பொருளாதார நிலை பற்றி ஒரு கடுமை யான நிலையை மேற்கொண்டாலோ அல்லது அவர்களில் சிலர் அரசுக்கு எதிராக செயல்படுவது என்று தீர்மானமாக இருந்தாலோ, வரவு செலவு திட்ட மசோதா எவ்வாறு நிறைவேறும்? எந்த ஒரு நிலையிலும் மசோதா தோல்வியடையக் கூடும்.  எந்த மசோதாவும் எந்த நிலையிலும் கைவிடப்படலாம்.  வரவு செலவு திட்ட மசோதா அரசாங்கத்தால் நிறைவேற்றப் படாவிட்டால், உங்களால் ஒரு பைசா கூட வரி வசூல் செய்ய முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்தத் திட்டம் என்னவாகும்? மற்ற இடங்களில் என்ன நடக்கும் என்று என்னால் கூறமுடியும். இங்கிலாந்தின் மக்கள் அவையில் நிதி அமைச்சர் வரவுசெலவு திட்ட மசோதாவைத் தாக்கல் செய்கிறார். அதில் ஏதேனும் ஒன்று மறுக்கப்பட்டால், அரசு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்கிறது; மற்றொரு குழு வந்து புதிய அரசை உருவாக்குகிறது. வரவுசெலவு திட்ட மசோதா தோல்வி அடைந்தால், அரசு பதவி விலகவேண்டும் என்பது நிபந்தனை. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இதர நாடுகளில் இப்படித்தான் நடைபெறுகிறது. ஸ்விட்சர்லாந்தில் கவுன்சிலின் பணியாள ராக இருக்கும் நிருவாகக் குழு நாடாளு மன்றம் விரும்புவதைச் செய்கிறது. பென்ட்லேன்ட் பிரபு ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைக்கிறார்; அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், நிரு வாகத்தை அவரால் தொடர்ந்து நடத்த முடியாது. அவர் ராஜினாமா செய்யவேண் டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர் ராஜினாமா செய்தால், அரசை அமைப்பதற்கு வேறு ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.  பென்ட்லேன்ட் பிரபு பதவி விலகிச் செல்லவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அரசின் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நீங்கள் கேட்கவில்லை; அந்த அளவுக்கு நீங்கள் முன்னேற்றம் பெற்றிருக்கவில்லை. வேறு ஒரு முறையில் உங்கள் திட்டங்களை முன்வைத்திருந்தால் அதனை நீங்கள் கேட்டிருக்க முடியும். வைஸ்ராயோ, கவனர்னரோ அமைச்சரவையில் சேராமல் தனியாக உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டு வரலாம் என்று நீங்கள் கேட்டிருக்கலாம். இங்குள்ள முன்னணித் தலைவர்களைக் கொண்டு நிருவாக அரசாங்கம் உருவாக்கப் படுகிறது. அமைச்சரவையை அமைக்க ஒருவர் கவர்னரால் கேட்டுக் கொள் ளப்படுகிறார். இது போன்ற அமைச் சரவை தோற்கடிக்கப்பட்டால், கவர்னர் வேறு ஒருவரை அமைச்சரவை அமைக்க அழைக்கலாம். இதுதான் காலனி நாட்டு சுய ஆட்சி. இந்த மனுவை எழுதிய கனவான்கள் ஹோம் ரூலைக் கேட்டுள்ளனர். வைஸ்ராயைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு சிறு மாற்றத்தைச் செய்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற நிபந்தனைகளை அவர்கள் மாற்றவில்லை. அதனால் நாம் ஒரு கலப்பின அமைப்பைப் பெற்றிருக் கிறோம்; ஆனால் அது எப்போதுமே வேலை செய்யப் போவதில்லை. இந்த பத்தொன்பது உறுப்பினர்களோ அல் லது அவர்களை வியந்து பாராட்டு பவர்களோ அரசின் இந்தக் கஷ் டத்தைக் கடப்பதற்கான ஒரு நடை முறையை முன்வைக்க முடியுமா என்றும், வரவு செலவு திட்டத்தை கவுன்சிலின் மூலம் நிறைவேற்றும் அதிகாரத்தைப் பெற்று நிருவாகத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல முடியுமா என்றும் கேட்க நான் விரும்புகிறேன்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

No comments:

Post a Comment