Sunday, March 13, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 6

 அன்னிபெசன்ட் அம்மையாரின் பல்டி
மேலும், சுயஆட்சிக்கான முதல் முயற்சி ஓர் ஆங்கி லேயப் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் வியப்பளிப்ப தாக இருக்கிறது. அவர் இங்கிலாந்து நாட்டுக்காரரா அல்லது அயர்லாந்து நாட்டுக்காரரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது இளமைக் காலத்தில் இங்கிலாந்து நாட்டு அரசியலில் போது மான அனுபவத்தை அவர் பெற்றிருந்தார் என்பதும், அரசியல் விவகாரங்களை முழுமையாக அறிந்திருந் தார் என்பதும் உண்மை. எனவே, ஏதோ ஓர் அறியாமையின் காரணமாக இந்தியாவுக்கு சுயஆட்சி தேவை என்ற ஒரு திட்டத்தை அவர் முன்வைத்திருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். சுயஆட்சி தேவை என்ற இந்தியாவின் கோரிக்கை பற்றிய அவரது கருத்துகளைப் பதிவு செய்த ஆவணம் ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம்.  அதில் இருந்து இரண்டு பகுதி களை மட்டும் உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்பு கிறேன்.   1905 இல் அவர் ஆற்றிய சொற்பொழிவில், ஒரு நாடு மற்றும் அதன் எல்லை என்பவற்றைத் தீர்மானிப்பதில் புவியியல் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரே மண்ணில் இரண்டு நாடுகள் இருக்க முடியாது. ஒரு நாட்டுக்கு தேச எல்லை என்று ஒன்று இருக்க வேண்டும். இந்தியாவில் ஒரே சமயத்தில், ஓர் இந்து நாட்டையும், ஒரு முஸ்லிம் நாட்டையும் நம்மால் பெற்றிருக்க முடியாது. இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், வங்காளம் முதல் கத்தியவார் வரையிலுமான ஒரே ஒரு இந்திய நாட்டை நாம் பெறவேண்டும். ஒரு புவியியல் எல்லை விவரிக் கப்பட்டதற்காக சுயஆட்சி வழங்குவது பற்றி சுய நினைவு உள்ள எவரும் கருதமாட்டார்கள். (கை தட்டல்). 1911 இல் அந்தப் பெண்மணி கூறுகிறார்: ஆங்கிலேய ஆட்சி நியாயமான ஆட்சி.  நாட்டை ஆள்வதற்கு சுயஆட்சி கோரும்  முன்பாக, இந்திய மக்கள் முதலில் நிற்கவும், நடக்கவும் கற்றுக் கொள் ளட்டும்.  இது உண்மையான பேச்சு. பெரியோர்களே, நமது நாட்டிற்கு சுயஆட்சி அளிக்கும் விஷயத்தின் மீது இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1911 ஆம் ஆண்டின் இறுதியில், சுயஆட்சி வழங்குவதற்குத் தேவையான சூழ்நிலைகள், நிபந்தனைகள் எவை என்பது பற்றிய சரியான கருத்துகளை அந்த அம்மை யார் கொண்டிருந்தார்.  இறுதியாக நான் குறிப்பிட்ட அவரது கருத்துகளை அவர் வெளிப்படுத்தி சரியாக நான்கு ஆண்டுகள் கழிந்த பின் 1915 இல், ஹோம் ரூல் இயக்கத்தின் தலைவராக அந்தப் பெண்மணி வெளியே வருகிறார்.
சுயஆட்சியின் தோற்றம்
இந்த சுயஆட்சி இயக்கம் உருவாகி வளர்ந்த சூழ் நிலைகள் பற்றி, பல சிரமங்களுக்கிடையில் நான்  நெருக்கமாக அறிந்து கொண்டேன்.  நாட்டின் முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள்அனைவரும் பெரும் எண்ணிக்கையில் தொடர்புடைய இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்படும் கட்சி நம் நாட்டில் உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தப் பெண்மணி எவ்வாறு காங்கிரஸ் கட்சியிடமிருந்து அரசியல் செல்வாக்கைக் கைப்பற்றி, தனது சொந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு,  காங்கிரஸ்காரர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று, அவர்களைப் பின்பற்றுவதற்கு பதிலாக அவர்களை வழிநடத்திச் செல்ல இயன்றவர் ஆனார்? இது எவ்வாறு நேர்ந்தது?  ஹோம் ரூல் என்னும் கருத்து சென்னையில் உருவாகிய கதை நியூ இந்தியா இதழின் பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய கட்டுரைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கும் சிரமத்தை எவரேனும் எடுத்துக் கொண்டால், அது அவர்களின் முயற்சிக்கு தக்க பலன் அளிக்கும்.  காங்கிரஸ் கட்சியில் சமரசம் ஏற்படுத்துவ தற்கான முயற்சியில் முதன்முதலாக சுயஆட்சி  இயக்கம் தோற்றம் பெற்றது. 1907-ஆம் ஆண்டில் சூரத் தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதி களிடையே, தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று  இரண்டு பிரிவுகளாக பிளவு ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  தீவிரவாதிகளுக்கும், மிதவாதி களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த 1914 இல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. ஒற்றுமையை ஏற்படுத்தும் திட்டம் நிராகரிக்கப் பட்டவுடன் நியூ இந்தியாவில் வெளிவந்த அச்சுறுத்தல் ஏற்படுத்திய கட்டுரை ஒன்றில், காங்கிரஸ் கட்சி இன்னமும் செயல் திறன் அற்றதாக இருக்குமே யானால், அதில் உள்ள இளைஞர்கள் செயல்பட வேண்டிய தருணம் இது. இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைமை அமைப் பாக விளங்குவதாக காங்கிரஸ் கருதப்படுவதால், அதற்கு எதிராக அவர்கள் செயல்படவேண்டிய தில்லை. ஆனால் காங்கிரஸ் தற்போது  மேற்கொள்ள விரும்பாத களங்களில் பணியாற்றும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக் கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேறு சொற் களில் சொல்வதானால், காங்கிரஸ் கட்சி சுயஆட்சி முயற்சியை மேற் கொள்ளவில்லை என்றால், நான் மேற்கொள்வேன் என்பதேயாகும். உண்மையில் அதன் பொருள் இதுதான். அதன்பின் நியூ இந்தியாவில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. ஆசியாவின் மறு மலர்ச்சிக்கு,  சீனாவின் ஆக்கிரமிப்பு எண்ணங்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை போன்று இந்தியாவுக்கு சுயஆட்சி அளிக்கப்பட வேண்டும் என்று அது கோரியது. சீனா ஒரு பெரிய தேசமானால், அது இந்தியாவைத் தாக்கக்கூடும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு சுயஆட்சி அளிக்கப்பட்டு, அது தன் கால்களில் நிற்கச் செய்யப்பட வேண்டும். அந்த வாதம்தான் முன் வைக்கப்பட்டது. பின்னர் 1915 ஆகஸ்ட் 3  அன்றைய நியூ இந்தியாவில்,  சுயஆட்சிக்கு மக்கள் போராடவேண்டும் என்றும், சுதந்திரத்துக்காக போரிட வேண்டும் என்றும்  தெரிவித்து, யார் எங்களுடன் சேர்வீர்கள்? என்று கேள்வி கேட்டு,  ஒரு தெளிவான எச்சரிக்கை வெளி வந்தது. ஆகஸ்ட் 17 அன்று வெளிவந்த கட்டுரையில், ஆங்கிலப் பேரரசு மறுகட்டமைப்புச் செய்யப்படுவதில் இந்தியாவின் சுதந்திரத்துக்கான வாய்ப்பு உள்ளது என்று அந்த அம்மையார் விவாதித்துள்ளார்.
உலகப் போர்ப் பிரகடனம்தான் இந்த சுயஆட்சிக் கருத்து தோற்றம் பெற்றதற்கான காரணம். ஜெர்மனி மீது இங்கிலாந்து போர் பிரகடனம் செய்து பல மாதங்கள் கழிந்தபின்தான் இந்த சுய ஆட்சி கருத்து முழுவதும் தோற்றம் பெற்றது. போரைத் தொடர்ந்து ஆங்கிலப் பேரரசின் மறுகட்டமைப்பில் இந்தியாவின் சுதந்திரத்துக்கான வாய்ப்புள்ளது என்ற தெளிவான அறிவிப்பு இது. ஆனால் யார் அதைச் சொல்லி இருந்தாலும் சரி, ஆங்கிலப் பேரரசு மறுகட்டமைப்பு செய்யப்படுவது உறுதியானது. அவ்வாறு சொன்னது யாராக இருந்தாலும், இந்திய சூழ்நிலைகள் மாற்றி அமைக்கப்படுவதும் உறுதியானது. எந்த ஒரு பொறுப்புள்ள மனிதனும் இவ்வாறு சொல்லியிருக்க முடியும் என்று நான் கருதவில்லை. பின்னர் செப்டம்பர் 7 அன்று நியூ இந்தியா இந்திய அரசியல் சூழ்நிலை பற்றி கலந்தாலோசிக்க, சர் பெரோஷ் ஷா மேத்தாவை சந்திக்க அன்னி பெசன்ட் பம்பாய் சென்றார் என்று அறிவித்தது. வேறு சொற்களில் சொல்வதானால், சுயஆட்சி பிரச்சாரம் பற்றி சர் பெரோஷ் ஷா மேதாவிடம் பேசுவதற்காகச் சென்றார் என்பதுதான். அவ்வாறுதான் நான் ஊகிக்கிறேன். செப்டம்பர் 13 அன்று பம்பாய் அசோசியேடட் பிரஸ் பிரதிநிதி ஒருவர் அன்னி பெசன்டுடன் இந்திய சுய ஆட்சி பற்றி பேசினார். இந்த விஷயத்தில் நாடு போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும், இதனை காங்கிரஸ் கட்சி தலைமையேற்று நடத்தவேண்டும் என்றும், காங்கிரஸ் இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், தானே அப்போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் அன்னி பெசன்ட் கூறினார். இந்தியாவுக்கு ஹோம்ரூல்  என்று அவர் அழைத்த சுயஆட்சிக்கான திட்டம் ஒன்றை காங்கிரஸ் வடிவமைத்த பிறகு, சுயஆட்சியைப் பற்றி அதிக அளவில் அறிந்திருப் பவர்களும், அதிக அளவில் எதிர்ப்பவர்களும் ஆன ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார்.பின்னர் செப்டம்பர் 15 அன்று காங்கிரஸ் மற்றும் சுயஆட்சி பற்றி எழுதிய அன்னி பெசன்ட் எஸ்.பி.சின்ஹா சுயராஜ்யம் கோரவேண்டும் என்று விரும்பினார். சர் பெரோஷ் ஷா மேதாவுடனான அன்னி பெசன்டின் சந்திப்பு மனநிறைவளிப்பதாக இல்லை என்பதால், அவர் பம்பாயில் நீண்ட காலமாக அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறார் என்றும், அவரைத் தவிர வேறு எவராவது இதனைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அளவுக்குத் துணிவு பெற்றவர்கள் இருக்கின்றனரா என்பது அய்யப்பாடாக உள்ளது என்றும். அன்னி பெசன்ட் தாக்கிப் பேசினார். நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதர் தீவிரமாக செயல்படமுடியாது; தனது ஆதரவாளர்கள் பின்பற்ற ஒரு தீவிரமான கொள்கையை வடிவமைக்க விரும்புபவராகவும் இருக்க முடியாது. சுயஆட்சிக்கான வழியைப் பின்பற்று வதற்கான அறிகுறி ஏதும் பம்பாயில் தோன்றவில்லை. பின்னர் செப்டம்பர் 25 அன்று சென்னையில் ஹோம் ரூல் இயக்கம் பிறந்தது. இதன் தலைவர் தாதாபாய் நவ்ரோஜி என்று கூறப்பட்ட போதும், அவர் இதனை மறுத்துள்ளார். அப்போது முதல் ஹோம் ரூல் இயக்கம் செயல்பட்டு வந்தது. ஹோம் ரூல் இயக்கத்திற்காக காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றும் முயற்சி 1915 இல் மேற்கொள்ளப்பட்டது.
எஸ்.பி. சின்ஹா அவர்களின் உறுதியையும், அறிவு நுட்பத் தையும் பாராட்டத்தான் வேண்டும். அவரை விட்டால், ஒரே மாதிரியான சிந்தனையுடைய அரசியல்வாதி வேறு எவரையும் இந்தியாவில் காண முடியாது. காங்கிரசைக் கைப்பற்றும் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. அடுத்த காங்கிரஸ் மாநாட்டிற்காக அது தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த காங்கிரஸ் மாநாட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் அதிகாரபூர்வமான செய்தி ஏதும் இல்லை என்பதால் அதனைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. அன்னிபெசன்ட் அம்மையார் வடிவமைத்த ஹோம் ரூல் இயக்கத்திற்குத் தாங்கள் ஆதரவாக இருக்கிறார்களா அல்லது எதிராக இருக்கிறார்களா என்பதை எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும் கூற முடியுமோ, அந்த அளவுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் கூறவேண்டிய வர்கள்  காங்கிரஸ்காரர்கள்தான்.  எனது நண்பர்கள் ஒரு சிலரிடமிருந்து அது பற்றி அறிந்து கொள்ள முயன்ற போதும், என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஹோம் ரூல் என்பதும் சுயஆட்சி என்பதும் ஒன்றுதான் என்றும், ஒரு சிறு வேறுபாடு மட்டுமே அவற்றிடையே உள்ளது என்றும்  அவர்கள் கூறினார்கள். அவர்களிட மிருந்து உறுதியாக எதனையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே தாங்கள் ஹோம் ரூல் இயக்கத்தவர்களா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். ஹோம் ரூலுக்கு இன்னமும் நாம் தயாராகவில்லை என்பதால், அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள் நாம் என்று மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதுமானது என்று கருதுகிறேன்.
சுயஆட்சிக்கான பக்குவத்தை இந்தியா இன்னமும் பெறவில்லை
சுயஆட்சி நமக்குக் கிடைக்கும் நேரம் வரவே வராது என்று ஒரு போதும்  நான் கூறமாட்டேன். அதற்கான நேரம் கட்டாயம் வரும்.  அன்னி பெசன்ட் அம்மையாரோ, அஹமது தம்பி மரைக்காயரோ அல்லது நானோ அதனைக் காண வாழ்ந்திருக்க மாட்டோம். எங்கள் காலத்திற்கு வெகுநாட்கள் கழிந்த பின்னரே அந்த நேரம் வரும். அதனைப் பெறும் முன் நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகள் பலப்பல உள்ளன. அவற்றை நிறைவு செய்யும் முன் நாம் அதனைப் பெற்றால், அது நாட்டையே பாழ்படுத்திவிடும். போருக்கு முன் அயர்லாந்து ஹோம் ரூலைப் பெற இருந்தது. ஹோம் ரூல் மசோதாக்கள் மக்கள் மன்றங்களில்  நிறைவேற்றப்படுவதற்காக விவாதிக்கப்பட்டு வந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டம் இரு முறை பிரபுக்கள் அவையால் நிராகரிக்கப்பட்டது. மூன் றாவது முறையும் பிரபுக்கள் அவை அதனை நிராகரித் தால், அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட லாம்.  என்ன நடந்தது? உள்நாட்டுப் போர்  தொடங்கக் கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்தது. அயர்லாந்தில் இருந்த ராணுவத்தினர் பலரும் தங்களின் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்து விட்டனர். அதனால் ராணுவம் பயனற்றதாக ஆகிவிட்டது. அயர்லாந்தில் உள் நாட்டுப் போர் மூளும் நிலை உருவானது. இந்தப்போர் தொடங்கியவுடன், ஹோம் ரூல் சட்டத்தினை சட்டப் புத்தகத்தில் வைப்பது என்றும், அதைப் பற்றி மற்றொரு முறை விவாதிக்கும் வாய்ப்பு ஏற்படும் வரை அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் ஒரு இணக்கமாக ஏற்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதனால், இன்று சாத்தியமே இல்லாததும், இன்று தேவையில்லாததும், இன்று தவிர்க்க முடியாததாக இல்லாததும் ஆன ஹோம் ரூலினை நீங்கள் இப்போது பெற்றாலும், அதனுடன் இறுதி ஒப்பந்தம் எதனையும் கொண்டு வர அதனால் இயலாது. பல பிரிவுகளைக் கொண்டிருக்கும், நம் நாட்டைப் போன்ற பிளவுபட்ட நாடு ஒன்றில்,   இந்தியா முழுவதிலும் செல்வாக்கு பெற்றுள்ள, நிலைபெற்ற, தற்போதுள்ள இங்கிலாந்து நாட்டு அரசின் கீழ் உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அதை விடக் குறைந்த அளவுதான் சுயஆட்சியின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும்.
ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் மறுகட்டமைப்பு
பெரியோர்களே, மேலும் தொடர்வதற்கு முன் ஒரு சிறிய விஷயத்தைப் பற்றி பேச நான் விரும்புகிறேன்.  ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் மறுகட்டமைப்பு இருக்கும் என்றும், அந்த மறுகட்டமைப்பில் இந்தியாவும் சேர்க்கப்படும் என்றும் அவர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். தற்போதுள்ள ஏற்பாடு தவறாகிப் போனால், அதனால் ஏற்படும் மாற்றங்களில், அடித் தளத்தில் வைத்துக் காண்பதற்குப் பதிலாக தன்னை மேல்தட்டில் வைத்துக் காணும் சமத்துவத்திலான நம்பிக்கையை எவரும் பெற்றிருப்பது இயல்புதான். அதனால் மிகப் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் மாறுதல் ஏற்படவேண்டும் என்று விரும்புகின்றனர். உருவாக்கி நிலைநிறுத்தப்பட்ட  ஒரு நிலையில் இருந்து ஏற்பட இயன்ற எந்த மாற்றமும் படிப்படியானதாகவும், மெல்ல மெல்ல ஏற்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நீங்கள் கவனமாக எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால், இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் இருந்த நிலையைவிட ஒரு மோசமான நிலையில் மாற்றம் ஏற்பட்ட பின் நீங்கள் இருப்பதைக் காண நேரிடலாம். இங்கிலாந்து நாட்டில் மறுகட்டமைப்பு முதலில் ஏற்படவேண்டும். இங்கி லாந்து அரசின் பல காலனி நாடுகளிலும் இந்த மறு கட்டமைப்பு ஏற்படக்கூடும்.  அதற்கான மிகவும் பொருத்தமான காரணங்கள் உள்ளன.
உலகப் போருக்குப் பின்,  தற்போது இங்கிலாந்து உள்ள நிலையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? பெரும் பாலான தொழிற்சாலைகள் ஒன்று மூடப்பட்டுவிட்டன அல்லது போர்த் தளவாடங்கள் செய்ய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.  அதனால், அவர்களின் தொழில் துறை முடங்கிய நிலையில் உள்ளது. அந் நாட்டில் இருந்த ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டனர். போரின் தொடக்க நிலையில் இங்கிலாந்து நாடு 730,000 துருப்புகள் கொண்ட ராணுவத்தைப் பெற்றிருந்தது. தற்போது, அவர்களின் ராணுவத்தில் 50 லட்சம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்கள். தங்கள் தங்களின் தொழில்களைக் கைவிட்டுவிட்டு ராணுவத் தில் சேர்ந்து பணியாற்றும்படி பணிக்கப்பட்டவர்கள் அவர்கள். சாதாரணமான, வழக்கமான தொழில் களிலிருந்து 50 லட்சம் மக்கள் ராணுவத்திற்கு எடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு மூன்று ஆண்டு களுக்குப் பிறகு, போர்க் களத்தில் இருந்து அவர்கள் திரும்பி வரும்போது, மறுபடியும் அவர்களைத் தங்கள் கால்களில் நிற்கச் செய்ய வேண்டும். அது ஒரு மாபெரும் பணியாகும். இந்தியாவில் இந்த இரண்டு வகையான நிலைகளும் இல்லை. போருக்கு முன் ஆங் கிலேய அரசின் கடன்களுக்கான ஆண்டு செலவு 300,000,000 பவுண்டுகளாக இருந்தது. இந்தப் போரினால் மூழ்கிப் போகக்கூடிய நிதியும், இந்த போருக்காக அவர்கள் திரட்டிய நிதிக்கான கடன் தொகையும் 300,000,000 பவுண்டுகளாக இருக்கும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.  சாதாரண மாக அரசின் ஆண்டு வருவாய் 100,000,000 பவுண்டு களாக இருக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த அவர்கள் கூடுதலாக ஆண்டுதோறும்  300 மில்லியன் பவுண்டுகளைத் திரட்ட வேண்டும். எங்கிருந்து இதனைத் திரட்ட முடியும்? அதன் காரணமாகத்தான் அவர்களின் நிதிச் சுமையைக் காலனி நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.  சுமைகளுக்கு ஈடான சலுகைகளும் தங் களுக்கு அளிக்கப்படாத வரை, அந்தச் சுமையை ஏற்க எவரும் முன்வரமாட்டார்கள்.
அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ளும்படி நாம் கேட்டுக்கொள்ளப்படவில்லை. நம்மால் அச்சுமையை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.  (நாங்கள் நூறு மில்லியன் தருகிறோம் என்று ஒரு குரல் ஒலித்தது.)  காலனி நாடுகளில் பலவும் இன்னும் அதிகமான அளவு நிதி அளித்துள்ளன. 300 மில்லியன் பவுண்டுகள் என்பது  ஓர் ஆண்டுக்கானது மட்டுமே.  அதனால் அக் கண்ணோட்டத்துடன், மறு கட்டமைப்பை அவர்கள் விரும்புவார்கள். அப்போது,   அவர்களின் கல்வி முறை, அமைப்பு முறை மற்றும் இதர துறைகளில் பல குறைகள், தவறுகள் இருப்பது  போரினால் வெளிப்படுத்தப்பட்டதை அவர்கள் காண நேரலாம்.  அவற்றை அவர்கள் சரி செய்ய வேண்டும். அப்படியானால் அது ஒரு மாபெரும் மறுகட்டமைப்பாக இருக்கும்.  ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கூட்டணி நாடுகளின் உதவிகளை அவர்கள் ஒன்று திரட்ட வேண்டும். அவர்களுடன் கூட்டணி அமைத்து, அவர்களுடன் சேர்ந்து போரிட்ட பல நாடுகள் உள்ளன. நெருக்கடியான, தேவையுள்ள காலத்தில் அவர்களுக்கு உதவிய மனிதர்கள் அவர்கள்.  தேவை யான காலத்தில் உதவி செய்பவனே உண்மையான நண்பன்.  அவர்களின் கூட்டணியைத் தொடர வேண்டுமானால்,  வரிகள் மற்றும் இதர விஷயங் களைப் பற்றிய சில ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டும். இவை எவற்றினாலும் இந்தியா பாதிக்கப் படவில்லை. அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கும் மறுகட்டமைப்பு கட்டாயமாக இருக்கும் என்று எவ்வாறு நம்மால் கூறமுடியும்? போருடன் தொடர்புள்ள மறு கட்டமைப்பினால் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதை நம்புவதற்கு நான் மறுக்கிறேன்.  ஆனால்,  நமது அரசியல் சீர்திருத்தத்தின் அடுத்த தவணையை நாம் கோருவதை அதனால் தடுக்க முடியாது; தடுக்காது.  எந்த ஒரு அரசியல் சீர்திருத்தத்தையும் கேட்பதில் இருந்து அது எந்த விதத்திலும் நம்மைத் தடுக்காது.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

No comments:

Post a Comment